ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவுக்கோரி அத்தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கமல்ஹாசனை அண்மையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் சந்தித்தார்.


இந்த சந்திப்பின் போது, அவரோடு காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, கோபண்ணா, செல்வ பெருந்தகை, கே.வி தங்கபாலு, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர் அசல் மௌலானா ஆகியோர் உடன் இருந்தனர்.
கமல்ஹாசனை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், கமல்ஹாசனை சந்தித்து ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான எனக்கு ஆதரவு தர வேண்டும், திமுக கூட்டணியில் அவர் இணைய வேண்டும் என எங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளோம். நிர்வாகிகளோடு கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதாக தெரிவித்தார்” என்றார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் செயற்குழுவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செயற்குழு கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வெற்றி பெற செய்ய வேண்டும். அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குகிறோம். மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலம் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தியாவின் பன்முகத்துவமும் இறையாண்மையும் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாகிவருகிறது. ஏகாதிபத்திய சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது.ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை வெற்றி பெறச் செய்து மதவாத சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

சமத்துவ, சகோதரத்துவ, சமூக நீதியின் மண் தமிழ்நாடு. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரத்துக்கு செல்வேன். நாடாளுமன்ற தேர்தலுக்கான நிலைப்பாட்டை அப்போது அறிவிப்போம். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரிப்பது என்பது பரந்த நோக்கம். தேசத்துக்காக நாம் அனைவரும் ஒரே மேடையில் அமரவேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் நான் ஏன் போட்டியிடக்கூடாது? மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம்” எனக் கூறினார்.
