கரூர் கூட்டநெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் இன்று பகல் 1 மணிக்கு விசாரணையை தொடங்க உள்ளதாகவும், அவரின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 16 பெண்கள், 9 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தர். காயமடைந்த 51 பேருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- துயரமான இதுபோன்ற சம்பவம் நடைபெற்று இருக்கக்கூடாது. முதலமைச்சர் அவர்கள் செய்தி அறிந்தவுடன் அருகிலுள்ள மாவட்ட அமைச்சர்கள் உடனடியாக இங்கு அனுப்பி வைத்தார். உடனடியாக மருத்துவ உதவிகளை செய்ய கூறினார். முதலமைச்சர் மிகுந்த வேதனையில் இருந்தார். முதலமைச்சர் இரவு 1 மணிக்கு வந்து இங்கு வந்து பார்த்துள்ளார். அவர்களுக்கு ஆறுதல் கூறினார். கூட்ட நெரிசலில் பலியான 39 போரில் 30 பேரின் உடல் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு
அவர்களின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள உடல்கள் பிரேத பரிசோதனை இன்னும் 2 மணி நேரத்தில் முடிந்து, அவர்கள் உடலும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். மருத்துவர்கள் அனைத்து பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.
கரூரில் இருந்து 200 மருத்துவர்கள், அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து 145 மருத்துவர்கள் என்று மொத்தம் 345 பேர் பணியாற்றி வருகின்றனர். மாவட்ட ஆட்சி தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்புகள் உறுதுணையாக நிற்கின்றனர். ஈடுசெய்ய முடியாத இழப்பு. இனி இதுபோன்ற இழப்புகள் நடைபெறக் கூடாது. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் இன்று பகல் 1 மணிக்கு இங்கு வந்து இங்கு சிகிச்சை பெறுபவர்களிடம் நடந்ததை கேட்டு அறிகிறார். அவரின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எதிர்கட்சி தலைவர் சில தினங்களுக்கு முன் அங்கு கூட்டம் நடத்தி உள்ளார் என்று டிஜிபி தெளிவாக கூறி உள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதி அறிக்கை கொடுத்ததும் உண்மை மக்களுக்கு தெரியவரும். அதன் பிறகு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மக்களை சந்திப்பது எல்லா இயக்க தலைவர்களின் ஜனநாயக உரிமை. அதை யாரும் தடுக்க முடியாது. அரசு அவர்களிடம் சில விதிமுறை கூறுகிறது. அதன் பிறகு கட்டுப்படுத்துவது கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களின் பொறுப்பு. கூட்டம் வரும்போது அங்கு நேரத்திற்கு வர வேண்டும். நான் யாரையும் குறை சொல்லவில்லை. இனி இதுபோன்று நடைபெறாமல் பார்த்துக் கொள்வோம். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் உறுதுணையாக இருப்போம், இவ்வாறு அவர் கூறினார்.