செந்தில் பாலாஜியால் இந்த ஆட்சிக்கே ஆபத்து- கிருஷ்ணசாமி
2022-23ம் ஆண்டு மதுவிற்பனை மூலம் 44,000 கோடி அரசுக்கு வருமானம் கிடைத்தது. 2023-24ல் 52,000 கோடி இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, “1971ல் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, கள்ளுக்கடை மற்றும் சாராயக்கடைகளை திறந்து வைத்தார். அதன் விளைவாக இளைஞர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார்கள். பின் மக்களின் எதிர்ப்பால் அந்த கடைகள் மூடப்பட்டன. பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் தொடர்ந்து கடைகளை திறப்பதும், மூடுவதாக இருந்து, கடந்த 20 வருடங்களாக டாஸ்மாக் மூலம் 5360க்கும் மேற்பட்ட சில்லரை விற்பனைக் கடைகள் மூலம் விற்பனை செய்து வந்தனர்.

துவக்கத்தில் 2 ஆலைகள் தான் இருந்தன. தற்போது தமிழகத்தில் மொத்தம் 19 மதுபான ஆலைகள் உள்ளன. அதில் 15 ஆலைகள் இன்றைய அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் நடத்துபவையாக உள்ளன. 2022-23ம் ஆண்டு மதுவிற்பனை மூலம் 44,000 கோடி அரசுக்கு வருமானம் கிடைத்தது. 2023-24ல் 52,000 கோடி இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது. மக்களை குடிக்க வைக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு திமுக அரசு செயல்படுகிறது.
2016 முதல் 6 ஆண்டுகள் தொடர்ந்து திமுக அனைத்து மேடைகளிலும் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதே குறிக்கோள் என்றது. இளம் விதவைகள் அதிகமாகி உள்ளனர் என்று கனிமொழி பேசியதையும் நாம் அறிவோம். ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆன பின்னும், அவர்கள் அறிவித்த மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு பதில் மனமகிழ் மன்றங்கள், பெட்டிக் கடைகள் மூலம் மதுவிற்பனை செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.
செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்கி, அவர் மீது வழக்கு தொடுக்க அனுமதி தர வேண்டும். ஜூன் 15 முதல் 2 மாதங்களுக்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் 100 பொதுக்கூட்டங்களை புதிய தமிழகம் நடத்த உள்ளது. செந்தில் பாலாஜியால் இந்த ஆட்சிக்கே ஆபத்து வரும். அவர் 5,362 சட்ட விரோத பார்கள் நடத்தி பகல் கொள்ளைக்கு நிகராக கொள்ளையடித்துள்ளார். அவர் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதான் திராவிட மாடல் அரசா? கடந்த 22 மாதமாக அரசுக்கு செல்ல வேண்டிய ஆயத்தீர்வை செலுத்தாமல், கரூர் பார்ட்டிகள் ஒவ்வொரு பாரிலும் 15 லட்சம் வரை வசூலித்து, செந்தில் பாலாஜியின் கஜானாவை மட்டும் நிரப்பியுள்ளார்கள்” எனக் கூறினார்.