spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு - கே.எஸ்.அழகிரி வரவேற்பு

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு – கே.எஸ்.அழகிரி வரவேற்பு

-

- Advertisement -

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2017-18 ஆம் ஆண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசின் நிதிநிலை அறிக்கையில் தேர்தல் பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, ரூபாய் ஒரு கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் நன்கொடை மூலம் வழங்கினாலும் அதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமோ அல்லது வேறு எந்த வகையிலோ எவரும் அறிந்து கொள்ள முடியாது. இது முற்றிலும் வெளிப்படைத்தன்மையற்றதாக இருப்பதாகவும், ஆளும் ஒன்றிய பா.ஜ.க. அரசு கார்ப்பரேட்டுகளுக்கு அரசு ரீதியாக செய்கிற உதவிகளுக்கு சன்மானமாக தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி குவித்து வருகிறது என கடுமையான குற்றச்சாட்டை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூறி வந்தன. இதன்படி 2018 முதல் 2022 வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கிய மொத்த நன்கொடை ரூபாய் 9208 கோடி. இதில் பா.ஜ.க. மட்டும் 5270 கோடி ரூபாய் நிதியாக பெற்றிருக்கிறது. இது மொத்த நன்கொடையில் 57 சதவிகிதமாகும்.

ks alagiri

அதேபோல, 2022-23 ஆம் ஆண்டில், பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பத்திர நன்கொடையாக ரூபாய் 2120 கோடி பெற்றிருக்கிறது. இது மொத்த நன்கொடையில் 61 சதவிகிதமாகும். ஆனால், காங்கிரஸ் கட்சி ரூபாய் 171 கோடி தான் பெற முடிந்தது. இத்தகைய சமநிலையற்ற தன்மையின் காரணமாக தேர்தல் அரசியலில் பா.ஜ.க., தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடைகளை குவித்து வருவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் பத்திர திட்டம் சட்டவிரோதமானது, இதன்மூலம் நன்கொடை அளித்தவர்களின் விவரங்களை எஸ்.பி.ஐ. வங்கி வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் இன்று ஆணை பிறப்பித்துள்ளனர். ஒன்றிய அரசிடம் கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது. நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை பொதுவெளியில் தெரிவிக்க தேவையில்லை என்பது வாக்காளர்களை உரிமைகளை பறிப்பதாக உள்ளது.

எனவே, தேர்தல் நன்கொடை அளிக்க வகை செய்த அனைத்து சட்ட திருத்தங்களையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்து தேர்தல் அரசியலில் வெளிப்படைத்தன்மையும், சமநிலைத்தன்மையையும் உருவாக்குகிற வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதார வரவேற்கிறேன். இதன்மூலம் ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கிற ஒன்றிய பா.ஜ.க., கார்ப்பரேட்டுகளின் உதவியோடு தேர்தல் நிதி குவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தேர்தல்கள் சுயேட்சையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற உச்சநீதிமன்ற தீர்ப்பு உதவிகரமாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

MUST READ