பண மதிப்பிழப்பு நடவடிக்கை அப்பட்டமான மக்கள் விரோத போக்கு என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று 6 ஆண்டுகள் கழித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதில், நீதிபதி பி.வி.நாகரத்தினம்மா, பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தது செல்லாது என்ற மாறுபட்ட தீர்ப்பை மிகத் தெளிவாக வழங்கியிருக்கிறார். தீர்ப்பு வழங்கிய மற்ற 4 நீதிபதிகள் பணமதிப்பிழப்பு திட்டத்திற்கான அரசின் நோக்கம் எதுவாக இருந்தாலும், மக்கள் படும் அவதி வேதனையாக உள்ளது. அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் தலையிட விரும்பவில்லை என்று கூறியுள்ளனர்.
பணமதிப்பிழப்பை பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தபோது சட்டப்படி பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் எதையும் பின்பற்றப்படவில்லை. 2015-16-ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 8.01 சதவீதத்தில் இருந்து 2017-18-ல் 6.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட இழப்பு ரூ.2.25 லட்சம் கோடி. எனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது அப்பட்டமான ஒரு மக்கள் விரோத பேரழிவு நடவடிக்கை என்ற குற்றச்சாட்டில் இருந்து பிரதமர் நரேந்திரமோடி தப்ப முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.