கன்னியாகுமரியில் கடற்கரையில் தனியாக இருந்த காதல் ஜோடியை தாக்கி, இளம்பெண்ணை பலாத்காரம் செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சொத்தவிளை கடற்கரையில் நேற்று முன் தினம் இரவு ஒரு காதல் ஜோடி தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் காதல் ஜோடியின் அருகே நெருங்கி அவர்களை மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த காதலன் தங்களை விட்டுவிடுங்கள் பணம் வேண்டுமென்றாலும் தருகிறோம் என கூறியுள்ளனர். மேலும் அந்த காதலன் அந்த இளைஞர்கள் ஒருவரின் கூகுள் பே நம்பருக்கு 10 ஆயிரம் ரூபாய் பணமும் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் அடங்காத அந்த இளைஞர்கள் காதலனை தாக்கி அங்கிருந்து விரட்டிவிட்டு விட்டு அந்த பெண்ணை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த காதலன் அருகில் உள்ள கிராம மக்களை அழைத்துக் கொண்டு அங்கு சென்ற நிலையில், அந்த இரு இளைஞர்களும் தப்பிச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மீட்ட கிராம மக்கள் அந்த காதல் ஜோடிக்கு ஆறுதல் கூறியுள்ளனர். இது தொடர்பாக சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பெண்ணை பலாத்காரம் செய்த லியோராஜ், சீமோலியன் ஆகிய இருவரை கைது செய்தனர்.