வங்கக்கடலில் நாளை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்க்டல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை ( அக்.24) புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மெல்ல மெல்ல வலுவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றத்தின் காரணமாக வானிலை கணிப்புகள் அப்படியே மாறிப்போனது. அதாவது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது என்றும் வானிலை ஆய்வு மையம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதனையடுத்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் நீடித்து வந்த நிலையில், இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து கரையை கடந்தது. ஆகையால் தமிழகத்திற்கான மழை வாய்ப்பும் குறைந்தது. இந்த நிலையில் வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.



