
மதுரை மாவட்டம், புதுநத்தம் சாலையில் 2,13,338 சதுர அடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் ஆறு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நேற்று (ஜூலை 15) மாலை 05.00 மணிக்கு திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நூலகத்தைப் பார்வையிட்டார். அத்துடன், பார்வையாளர் கையேட்டில் குறிப்பெழுதி கையொப்பமிட்டார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட எச்.சி.எல். குழுமத்தின் நிறுவனர் ஷிவ் நாடார் மற்றும் எச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் ஆகியோருக்கு நூலகத்திற்கான உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதுரை மாநகராட்சி மேயர், மாநகராட்சி துணை மேயர், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன் இ.ஆ.ப., பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா இ.ஆ.ப., மதுரை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதா இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.