அனைத்து முன்னேற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். சாலை பணிகள், குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவு.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமை செயலாளர் சிவதாஸ் மினா, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன், அனைத்து மாநகராட்சிகளின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு,
மக்களுக்காக செய்ய வேண்டிய பணிகளை விரைந்து செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துவதற்காக தான் இந்த கூட்டம் கூட்டி உள்ளோம்.
சில அதிகாரிகளின் பணிகளில் சுணக்கம் உள்ளது, மக்களுக்கான திட்டங்களை விரைந்து செய்ய வேண்டும் என்பதே கூட்டத்தின் நோக்கம்.கண்டிப்பதற்கும் தண்டிப்பதற்கும் இந்த கூட்டம் இல்லை, எவ்வளவு அறிவுறுத்தினாலும் சரியாக பணி செய்யாமல் , நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு எங்களை தள்ள வேண்டாம்.
குடிநீர் வினியோகம் , தூய்மை பணிகளை தினசரி கண்காணிக்க வேண்டும்.மழைக்காலத்திற்கு முன் நீர்நிலைகளை தூர்வாரி ஆழப்படுத்தி சீரமைக்க வேண்டும், பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
மழைநீர் வடிகால்களில் அடைப்புகளை அகற்றி சுத்தம் செய்வதுடன் விடுபட்டுள்ள பகுதிகளில் வடிகால்களை கட்ட வேண்டும். பழுதடைந்த சாலைகள் அனைத்தையும் சீர் செய்ய வேண்டும்.
பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட பலங்களை சுற்றி பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் கொடுப்பதற்காக சாலையினை வெட்டுவதற்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் அனுமதி பெறுவதற்கு கால தாமதமாவதால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
இதை தவிர்க்கும் பொருட்டு பெருநகர சென்னை மாநகராட்சியின் அனுமதி பெறுவதற்கு பதிலாக, இணைப்புகள் கொடுப்பதற்கான தகவலை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு தெரிவித்துவிட்டு இணைப்புகள் வழங்கலாம்.இதனால் பொது மக்களின் பல இன்னல்களுக்கு முற்றுபுள்ளி வைக்க முடியும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் நீர்வழிப்பாதைகளில் நடைப்பெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளை மழை தொடங்கும் முன் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே போல் சென்னையில் புதிய சாலைகள் அமைக்கவும் 282 கோடி மதிப்பில் டெண்டர் கோரியுள்ளதாகவும் விரைவில் பணிகள் தொடங்கி முடிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், துறைமுகம் மதுரவாயில் இடையே அமைக்கப்பட்டு வரும் ஈரடுக்கு மேம்பால பணிகளுக்காக கூவம் ஆற்றின் இடையே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் செப்டெம்பர் மாதத்திற்கு அகற்றப்படும் எனவும் அமைச்சர் நேரு தெரிவித்தார்.