சென்னை விமான நிலையத்திற்கு நள்ளிரவில் வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, அதிகாரிகள் விடிய விடிய நடத்திய சோதனையில் அது புரளி என்பது தெரியவந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் கடந்த வாரத்தில் பல்வேறு விமானங்களுக்கு வெடி குண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இதனை அடுத்து வெடி குண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் வெடி குண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதனை அடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு வந்த மர்ம இ-மெயிலில் விமான நிலையத்தில் சக்தி வாய்ந்த வெடி குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில், நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து, உடனடியாக வெடி குண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் மோப்ப நாய் உதவியுடன், விமான நிலையம் மற்றும் விமான நிலைய வளாகப் பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
குறிப்பாக விமானங்கள் நிறுத்திவைக்கும் பகுதி, ஓடுபாதை, விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடம், பயணிகள் புறப்பாடு, சரக்கு பார்சல்கள் விமானங்களில் ஏற்றும் பகுதி ஆகிய இடங்களில் தீவிர சோதனைகள் நடந்தன. நள்ளிரவில் தொடங்கி அதிகாலை வரை நீடித்த இந்த சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் வழக்கம்போல் புரளி என்று தெரியவந்தது. இது தொடர்பாக, சென்னை விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.