குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்; நிச்சயம் நடவடிக்கை- மா.சுப்பிரமணியன்
குழந்தை விவகாரத்தில் கவனக்குறைவு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார்.
ராமநாதபுரத்தை சேர்ந்த தம்பதி, தனது குழந்தைக்கு உடல்நலக்குறைவு என ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு செவிலியர்கள் டிரிப்ஸ் போட்டுள்ளனர். இதனையடுத்து ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகிய நிலையில், அந்த கையே அகற்றப்பட்டது. செவிலியர்களின் அலட்சியத்தால், குழந்தையின் கை அழுகியதாக பெற்றோர் புகார் தெரிவிக்கும் நிலையில், இச்சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்துவருகின்றனர்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “குழந்தைக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் தவறு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. குழந்தை விவகாரத்தில் கவனக்குறைவு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக ஈபிஎஸ் வதந்திகளை பரப்புகிறார். இதுபோன்ற வதந்திகளை பரப்புவது நல்லதல்ல. குழந்தைக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் தவறு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. மருத்துவக்குழுவின் விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், நாளை மாலைக்குள் அறிக்கை வரும். உரிய விசாரணைக்குப் பின் நிவாரணம் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும். குழந்தை இறந்துவிட்டதாக வதந்தி பரப்புவதை ஈபிஎஸ் நிறுத்த வேண்டும்.
குழந்தைக்கு ரத்த ஓட்டம் குறைவாக சென்றதால், கை தளர்ச்சி ஏற்பட்டு ரத்த உறைதல் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் கேட்டுக்கொண்டால், குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யவும் தயாராக உள்ளோம்.” என்றார்.