உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரா?
உதயநிதி ஸ்டாலின் திறமைக்கும் செயல்பாட்டுக்கும் ஏற்றதை முதல்வர் கொடுப்பார் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சக்கிமங்கலம் எல்.கே.பி.நகரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி, சிக்கந்தர்சாவடி, வலையங்குளம் அரசுப்பள்ளிகளில் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் இந்தியன் வங்கியுடன் இணைந்து அரசு பள்ளிகளுக்கு நவீனப்படுத்தும் வகையில் எல்இடி திரைகளை வழங்கி ஸ்மார்ட் வகுப்பறைகளை வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், இந்தியன் வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, “மதுரை திருப்பாலை பகுதியில் 19ம் தேதி முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படக்கண்காட்சி தொடங்க உள்ளது. சட்டமன்ற உறுப்பினராக, மேயராக, துணைமுதல்வராக, முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும், உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வராக வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் பேசினார். உதயநிதி ஸ்டாலின் திறமைக்கும், செயல்பாட்டுக்கும் ஏற்றார் போல முதல்வர் முடிவுசெய்து கொடுப்பார்” என்றார்.