தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள ஏப்ரல் 23 (வியாழக்கிழமை) அன்று வாக்காளர்கள் அனைவரும் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அன்று அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குப் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவு

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, தேர்தல் நடைபெறும் நாளன்று தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும்.
விடுமுறை அளிக்க மறுக்கும் அல்லது ஊதியத்தைக் குறைக்கும் நிறுவனங்கள் மீது தேர்தல் ஆணையம் மற்றும் தொழிலாளர் நலத்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பணி நிமித்தமாக வெளிமாவட்டங்களில் தங்கியிருப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக இந்த விடுமுறை அவசியமாக்கப்பட்டுள்ளது.
“ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற ஏதுவாக அனைத்துத் தரப்பு ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கப்படுவதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்” எனத் தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்
