கருணாநிதியின் பேனா எப்போதெல்லாம் குனிந்ததோ அப்போதெல்லாம் தமிழ்நாடு தலை நிமிர்ந்தது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதியின் மகன் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், “பிரதமர் மோடி, மதுரைக்கு வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிவிட்டு சென்றார். இன்றுவரை எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆனது என்று தெரியவில்லை. உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கலை வைத்து தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார். அதற்கு பிறகாவது பாஜகவுக்கு வெட்கம் வந்திருக்க வேண்டாமா? அடுத்தது, நாடாளுமன்றத் தேர்தல் வருமே, இன்னொரு செங்கலை எடுத்துக்கொண்டு உதயநிதி கிளம்பிடுவாரே என்ற பயம் வேண்டாமா அவர்களுக்கு?
கருணாநிதியின் பேனா எப்போதெல்லாம் குனிந்ததோ அப்போதெல்லாம் தமிழ்நாடு தலை நிமிர்ந்தது. கருணாநிதியின் பேனா, தமிழர்களின் தலையெழுத்தை மாற்றியது. வாரிசு அரசியல் அவப்பெயர் வரும் என இளைஞரணி பொறுப்பு எனக்கு தர தயங்கினார். திமுக இளைஞரணி அமைப்பாளராக நியமனமாகி படிப்படியாக உயர் பதவிக்கு வந்தேன். வெளிநாட்டில் இருக்கும் கறுப்புப் பணத்தை கொண்டுவந்து குடிமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி கூறினாரே ரூ.15 ஆயிரம் அல்ல ரூ.15 ஆவது போட்டீர்களா?
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக பிரதமர் கூறியது குறித்து கேட்டால் பதில் இல்லை. கனிமொழி, டி.ஆர்பாலு உள்ளிட்டோர் நாடாளுமன்றத்தில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டதே அது என்ன ஆனது? அதற்கும் பதில் இல்லை.” என சாடினார்.
