பட்டாவுக்கு வில்லங்க சான்றிதழ் பெறும் புதிய நடைமுறை வரும் வாரம் சோதனை அடிப்படையில் தொடங்க உள்ளது.


தமிழ்நாட்டில் சொத்துக்கு பட்டா வாங்குவது கடினமான செயலாக இருந்து வந்த நிலையில், திமுக அரசின் தொடர் நடவடிக்கை காரணமாக தற்போது அது மிகவும் எளிதாகி விட்டது. https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் எளிதாக பட்டா பெற்றுக் கொள்ளலாம். அதேபோல பத்திரப்பதிவு செய்தவுடன் உட்பிரிவு இல்லாத சொத்துகளுக்கு உடனடி பட்டா மாறுதலும் செய்யப்படுகிறது.
இந்நிலையில், சொத்து பற்றிய உரிமை விவரங்களை மக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் விதமாக வருவாய்த் துறை புதிய ஆன்லைன் வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஒரு சொத்தின் உரிமையாளர் யார்?, அவரது பெயர் என்ன? இதற்கு முன்பு இந்த சொத்து யார் பெயரில் இருந்தது? அதோடு வங்கியில் இந்த சொத்து அடமானத்தில் இருக்கிறதா? இந்த சொத்தின் மீது என்னென்ன பறிமாற்றங்கள் நடந்து இருக்கிறது? என்ற விவரங்களை பத்திரப்பதிவு துறை வழங்கும் வில்லங்கச் சான்றிதழ் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
அதேவேளையில் ஒரு சொத்தின் தற்போதைய உரிமையாளரை, வருவாய்த் துறை மூலம் பட்டா மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் பட்டாவில், பத்திரப் பதிவுத் துறை வழங்கும் வில்லங்க சான்றிதழ் போல், அனைத்து விவரங்களையும், பரிமாற்றங்களையும் தெரிந்துகொள்ள முடியாது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக தமிழக அரசு தற்போது ”பட்டா வரலாறு” என்ற புதிய சேவையை கொண்டு வந்துள்ளது.

இந்த பட்டா வரலாறு சேவையின் மூலம், ஒரு நிலத்தின் முன்பிருந்த பட்டா வைத்திருந்தவர்களின் பெயர்கள், பெயர் எப்போது மாற்றப்பட்டது?, எந்த ஆணையின் பேரில் பெயர் மாற்றம் நடைபெற்றது?, பட்டா எந்த காலக்கட்டத்தில் யாரிடம் இருந்தது? என்பன போன்ற விவரங்களை முழுமையாக தெரிந்துகொள்ள முடியும். இந்த பட்டாவுக்கு வில்லங்க சான்றிதழ் பெறும் நடைமுறை அடுத்த வாரம் முதல் சோதனை அடிப்படையில் தொடங்குகிறது. முதல்கட்டமாக ஒரு தாலுகாவில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த பட்டா வில்லங்க சான்றிதழ் பெற பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டும். சோதனை முறை வெற்றி பெற்றுவிட்டால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவார். தற்போதைய நிலையில் இந்த பட்டா வரலாறு, 2014-ம் ஆண்டு முதல்தான் இப்போதைக்கு எடுக்க முடியும். இந்த சோதனை நடைமுறைக்கு சாத்தியமானால், தமிழ்நாடு முழுவதும் விரிவுப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது.
