நடிகர் விஜய்யின் மாநாடு மக்களிடத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமானிடம், மருதுபாண்டியர்கள் புகழை மறைக்க இன்று மாநாடு நடத்துகிறாரா விஜய்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலத்த அவர், “விஜய் வேண்டுமென்று அப்படி செய்யவில்லை. என் தம்பியை பற்றி எனக்கு தெரியும். ” என்றார்.
மேலும், “நடிகர் விஜயின் மாநாடு மக்களிடத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நாங்கள் அரசியலில் வரும் போது ஆதரவு இல்லை. திரைப்புகழில் இருக்கும் போது “வீச்சும் ரீச்சும்” அதிகம். எங்களுக்கு அப்படி கிடையாது. கடைசி வரையில் தமிழர்கள் நாங்கள் அனாதையாகவே இருக்க வேண்டி உள்ளது.”
மாநாட்டில் அண்ணா, எம்ஜிஆர் கட் அவுட்கள் வைக்கப்படவில்லை என்ற கேள்விக்கு, “தமிழக அரசியல் வரலாற்றில் அரசியலும், இலக்கியமும் மேடையில் பேசியது அண்ணா வந்த பிறகு தான். அந்த மதிப்பு மரியாதை எப்போதும் அவர் மீது உண்டு. நீண்ட காலம் உழைத்து ஆட்சி அதிகாரத்திற்கு வரும்போது அவர் ஒரு கெடு வாய்ப்பாக மரணம் அடைந்தார். அவர் இருந்திருந்தால் பெரிய மாறுதல்கள் ஏற்பட வாய்ப்பு இருந்திருக்கும். பிரபாகரனை நான் வைத்திருக்கிறேன் என்பதால் விஜய் வைக்காமல் இருந்திருக்கலாம்.
கட் அவுட் அல்ல அரசியல், கருத்தியல் தான் அரசியல். வேலுநாச்சியார், அம்பேத்கர் கட் அவுட் வைப்பதெல்லாம் பெரிதல்ல. அவர்கள் யார் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதுதான் முக்கியம். வேலுநாச்சியார், சுந்தரலிங்கம் குறித்து பேசாவிட்டால் அவர்கள் யார் என்பது இந்த தலைமுறைக்கு தெரியாமல் போயிருக்கும். அவர்களை கட் அவுட்களாக விஜய் வைத்திருப்பதை பார்த்து பெருமை அடையுங்கள்.
பிறப்பொக்கும் என முதலில் கொண்டு வந்தது நான் தான். அதை என் தம்பி விஜய் கொண்டு வந்ததில் மகிழ்ச்சி. கட்சிக்கொடியில் என் கொடிக்கும் விஜய் கொடிக்கும் வித்தியாசம் தெரியாது. இருவரது கட்சிக்கொடியும் ஒரே நிறம் தான். கட்சிக்கொடியில் நான் புலியை வைத்திருக்கிறேன். அவர் யானையை வைத்திருக்கிறார். இதுவரை கருப்பு – சிவப்பு என்று இருந்த நிலை தற்போது சிவப்பு – மஞ்சள் என மாறுதல் அடைகிறது. மகிழ்ச்சி அடையுங்கள்.
ஒரே கொள்கையில் இருந்தால் கூட்டாக தான் நிற்க வேண்டும் என்று இல்லை; நிற்கக் கூடாது என்றும் இல்லை. அதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும். நடிகர் விஜய் முடிவு செய்ய வேண்டும். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியதில் உண்மை உள்ளது. மதுரையில் விஜயகாந்த் மாநாட்டிற்கு அதிக அளவில் மக்கள் கூடினார்கள். அது மறுப்பதற்கில்லை.” என்றார்.
விஜயை பார்ப்பதற்காகவே கூட்டம் கூடுகிறது, இது ஓட்டாக மாறாது என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்களே என்கிற கேள்விக்கு பதிலளித்த சீமான், “விஜய்யை பார்க்கவே கூட்டம் வரட்டும். அது வாக்காக மாறும் மாறாது என்பதை விட்டு விடுங்கள். அதை மக்களை தீர்மானித்து விடட்டும். அதைப்பற்றி விஜய் கவலைப்படட்டும். பார்வையாளர்களாக இருப்பவர்களே இது சரியாக வரும், வராது, இது இப்படி, அப்படி என கருத்து சொல்ல வேண்டாம். விஜய் தற்போது தான் கருத்தரித்துக்கொண்டிருக்கிரார். அதற்குள்ளாக பெண் பிள்ளை தான் பிறக்கும், ஆண் பிள்ளை பிறக்கும் என நீங்கள் ஏன் சண்டை போடுகிறீர்கள்” என்று கூறினார்.
விஜய் மாநாட்டில் பேசுவது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களிடம் கருத்து கேட்டதாக கூறப்படுகிறது.. உங்களிடம் ஏதேனும் கருத்து கேட்கப்பட்டதா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு, “அவருக்கு( விஜய்) என்ன பேச வேண்டும் என்று தெரியும்” என்று பதிலளித்தார்.