கிருஸ்துமஸ் மற்றும் அரையாண்டு விடுமுறையை கழிக்க சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் ஒன்றாம் தேதி சென்னை திரும்ப உள்ள நிலையில் ஆம்னி பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

கடந்த 25 தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு அதிக அளவில் பொதுமக்கள் சென்றனர். அதே நேரத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறையும் விடப்பட்டதால் குழந்தைகளுடன் பெற்றோர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடி விட்டு சொந்த ஊரில் இருந்து ஒன்றாம் தேதி மீண்டும் சென்னை திரும்ப உள்ளனர். இதனால் அரசு நிர்ணயத்தை கட்டணத்தை விட மூன்று மடங்கு கட்டணத்தை ஆம்னி பேருந்துகள் உயர்த்தி உள்ளது.

குறிப்பாக நாளை 27 தேதி திருநெல்வேலியில் இருந்து சென்னை வர 1500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆனால் 1 தேதி இரவு 3500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.அதே போல் நாளை கோவையில் இருந்து சென்னை வர 1000 ரூபாய் உள்ள நிலையில் 1 தேதி இரவு 3000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் நாளை திருச்சியில் இருந்து சென்னை வர 700 ரூபாய் கட்டணம் உள்ள நிலையில் 1 தேதி இரவு 2300 இருந்து 2800 ஆக உள்ளது.இது போல் மதுரையில் இருந்து சென்னை வர நாளை 900 ரூபாய் கட்டணம் உள்ளது. ஆனால் 1 தேதி 2800 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகளிலும் இதேபோல கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.
இது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனவே கட்டண உயர்வு தொடர்பாக தமிழக அரசு நிர்ணயித்த கட்டத்தை விட தற்போது கூடுதல் கட்டணம் வசூலிக்க பட உள்ள நிலையில் இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பிலிருந்து மீண்டும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
