தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
சமீபத்தில் நடைபெற்ற இப்தார் நோன்புத் திறப்பு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட ஜி.கே.வாசனிடம், “சிறுபான்மை மக்களின் வாக்கு உங்களுக்குக் கிடைக்குமா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அவர், ”சிறுபான்மை மக்களின் உணர்வுகளையும், அவர்களின் எண்ணங்களையும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பிரதிபலித்து வருகிறது. அவர்களின் நலனுக்காக எங்கள் கட்சி எப்போதும் குரல் கொடுத்து வந்துள்ளது,” எனத் தெரிவித்தார்.
தற்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகா, எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் போட்டியிட உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பாஜகவின் ‘தாமரை’ சின்னத்தில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சிறுபான்மையினர் வாக்குகள் குறித்த வாசனைப் பதிலானது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
சிறுபான்மை மக்களின் ஆதரவைத் திரட்டும் நோக்கில், தமாகா தனது அடுத்தகட்ட பிரச்சார வியூகங்களை வகுத்து வருவதாகவும் அவர் அப்போது குறிப்பிட்டார்.
வேட்பாளர் பட்டியல் வெளியீடு…தாமரை சின்னத்தில் போட்டி ஏன்? –ஜி.கே.வாசன் விளக்கம்
