spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது - ஓபிஎஸ் தாக்கு!

தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது – ஓபிஎஸ் தாக்கு!

-

- Advertisement -

ஓ.பன்னீர்செல்வம்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளவர்களை உடனடியாக கண்டுபிடித்து, கைது செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டரை ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில், ரவுடிகளின் அராஜகமும், தி.மு.க.வினரின் அத்துமீறலும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகாவைச் சேர்ந்த நியூஸ் 7 தொலைக்காட்சியின் செய்தியாளர் திரு. நேசப்பிரபு அவர்கள் தன்னை சில மர்ம நபர்கள் கண்காணிப்பதாக நேற்று காவல் நிலையத்திற்கு புகார் அளித்து அதன்மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காத நிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் அவர்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த செய்தியாளர் திரு. நேசபிரபுவை காமநாயக்கன்பாளையம் காவல் துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நியூஸ் 7 தொலைக்காட்சி செய்தியாளர் புகார் அளித்த உடனேயே காவல் துறை துரிதமாக செயல்பட்டிருந்தால், இந்தக் கொலை வெறித்தாக்குதல் தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால், இதைச் செய்ய காவல் துறை தவறிவிட்டது. காவல் துறையினரின் மெத்தனப் போக்கே இந்தக் கொலைவெறித் தாக்குதலுக்கு காரணமாகிவிட்டது.

இந்தக் கொலை வெறித் தாக்குதலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒருபுறம் என்றால், மறுபுறம் தி.மு.க.வினரால் நடத்தப்படும் அராஜகம் தலைவிரித்து ஆடுகிறது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பாகல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று அரசு சார்பில் நடைபெற்ற இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் மாணவ, மாணவியருக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கும் தி.மு.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அந்த இடமே போர்க்களமாக காட்சியளித்தது. இதேபோன்று, திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த நாச்சார்குப்பம் பஞ்சாயத்து, கம்மியம்பட்டு புதூரில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த அங்கன்வாடி மையம் அமைந்துள்ள இடம் தங்கள் உறவினருக்கு சொந்தமானது என்றுகூறி அங்குள்ள குழந்தைகளை வெளியேற்றி அந்த மையத்தையே தி.மு.க. கிளைச் செயலாளர் பூட்டி வைத்த சம்பவம் நேற்று அரங்கேறியுள்ளது.

மொத்தத்தில், கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது. நியூஸ் 7 தொலைக்காட்சி செய்தியாளர்மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளவர்களை உடனடியாக கண்டுபிடித்து, கைது செய்து, உரிய விசாரணை நடத்தி, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவும்; செய்தியாளருக்கு உயர்தர மருத்துவச் சிகிக்சை மற்றும் நிவாரணம் வழங்கவும்; புகார் பெறப்பட்டும் உடனடி நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ