சென்னை விமான நிலையத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, பயன்பாட்டில் இல்லாத, 3 பழைய விமானங்களை, விமான நிலைய பாதுகாப்பு நலன் கருதி, உடனடியாக அகற்றுவதற்கு, இந்திய விமான நிலைய ஆணையம் பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


சென்னை விமானநிலையத்தில், இந்த பழைய விமானங்கள் அகற்றப்படுவதால், மற்ற விமானங்களுக்கு கூடுதலாக, நிறுத்தும் இடவசதி கிடைக்கும். மேலும் ஓடுபாதையில், ஓடும் விமானங்களுக்கு, பறவைகளால் ஏற்படும் ஆபத்துகளும் குறையும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். சென்னை விமான நிலையத்திலிருந்து ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, என்.இ.பி.சி., கிங்பிஷர்,ஜெட் ஏா்வேஸ்,டெக்கான் ஏா்லைன்ஸ்,பேராமவுண்ட் ஆகிய விமான நிறுவனங்களை சோ்ந்த விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது அந்த விமான நிறுவனங்கள் செயல்பாட்டில்லை. இந்த செயல்பாட்டில் இல்லாத டெக்கான் ஏா்லைன்ஸ்,பேராமவுண்ட் ஆகிய விமான நிறுவனங்களின் விமானங்கள் எதுவும் சென்னை விமானநிலையத்தில் நிறுத்தி வைக்கப்படவில்லை.
ஆனால் என்.இ.பி.சி.,கிங்பிஷா்,ஜெட் ஏா்வேஸ் ஆகிய விமான நிறுவனங்களின் 12 பயன்படுத்தப்படாத விமானங்கள்,சென்னை விமானநிலையத்தின் வடமேற்கு பகுதியில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதில், என்.இ.பி.சி., விமானங்கள் 4, ஜெட் ஏர்வேஸ் விமானம் 1,ஆகிய 5 விமானங்கள், கடந்த 2021ஆம் ஆண்டில்,முறைப்படி தமிழ்நாடு அரசின் வருவாய்துறை அதிகாரிகள் ஒத்துழைப்போடு, அப்புறப்படுத்தப்படும் பணிகள் நடந்தன.விமானங்களை உடைத்து அப்புறப்படுத்தும்போது, அதனால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுத்தப்படாத நிலையில் பணிகள் நடந்தன.
இந்நிலையில் கிங்பிஷர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களை அப்புறப்படுத்தும் பணி, சில மாதங்களுக்கு முன் நடந்தது. அதில், பயன்படுத்தும் நிலையில் இருக்கும், இன்ஜின்கள் உட்பட, தொழில்நுட்ப கருவிகள், முக்கியமான பாகங்கள் தனியே பிரித்து எடுத்து வைக்கப்பட்டுள்ளன. அவைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது தனியார்களுக்கு சொந்தமான,மேலும் 3 பழைய விமானங்களையும் அப்புறப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகளை அந்தந்த தனியார் நிறுவனங்கள் எடுத்து வருகின்றன.

இந்த உபயோகத்தில் இல்லாத பழைய விமானங்களை அப்புறப்படுத்துவதன் மூலமாக, 2012 முதல், தற்போது வரையிலான விமான நிறுத்தக் கட்டணம், சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும். இதனால், சென்னை விமான நிலையத்திற்கு கூடுதல் வருவாய் மொத்தமாக கிடைக்கும். இது தவிர, சென்னை விமானநிலையத்தின் விமானங்கள் நிறுத்தி வைக்கும் இடங்களை இந்த பழைய விமானங்கள்,பல ஆண்டுகளாக ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன. இப்போது இந்த விமானங்கள் அகற்றப்படுவதால், மற்ற விமானங்களை நிறுத்துவதற்கு கூடுதல் இடவசதிகள் கிடைக்கும்.
இவைகள் தவிர மேலும் முக்கியமாக, இந்த பழைய விமானங்கள் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக தொடா்ந்து நிறுத்தப்பட்டிருந்ததால்,பல்வேறு வகையான பறவைகள், அந்த விமானங்களுக்குள் கூடுகட்டி, வசித்து , இனவிருத்தி செய்து வந்தன. இதனால்,விமானங்கள் புறப்படும்போதும், தரையிறங்கும்போதும், பறவைகளால் விமான போக்குவரத்துக்கு, ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் உபயோகத்தில் இல்லாத இந்த பழைய விமானங்கள், விமான நிலையத்தின் ஒதுக்குப்புறமாக அடையார் ஆற்றை ஒட்டிய இடமாக இருப்பதால், பாம்புகளின் புகலிடமாகவும், இந்த பழைய விமானங்கள் உள்ளன. இதனால் அந்தப் பகுதியில் விமான நிலைய ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் பணிக்குச் செல்லவும் அச்சம் ஏற்படுகிறது.
இதைப் போன்று விமான நிலைய பாதுகாப்புக்கு பல்வேறு விதங்களில் அச்சுறுத்தலாக இருக்கும், இந்த 3 பழைய விமானங்களையும் உடனடியாக அப்புறப்படுத்த, இந்திய விமான நிலைய ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது சம்பந்தமாக அந்த தனியார் விமான நிறுவனங்களுக்கு, சென்னை விமான நிலைய அதிகாரிகள் பல முறை தொடர்ந்து அறிவுறுத்தல் கடிதங்கள் வழங்கியும், விமான நிறுவனங்கள் தங்களுடைய செயல்பாட்டில் இல்லாத பழைய விமானங்களை அகற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றன.
இதை அடுத்து இந்திய விமான நிலைய ஆணையம், இந்த பழைய செயல்பாட்டில் இல்லாத விமானங்களை அகற்றுவதற்கு, கண்டிப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அதன்படி, பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை விமான நிலைய இடத்தை, பல ஆண்டுகளாக ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கும், இந்த 3 பழைய விமானங்களையும், விமான நிறுவனங்களின் நிர்வாகிகள், உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது சம்பந்தமாக அந்தந்த விமான நிறுவன நிர்வாகிகள், வருகின்ற 10 தேதி வெள்ளிக்கிழமை, சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு நேரடியாக வருகை புரிந்து, இந்த விமானங்களை எத்தனை நாட்களில் அகற்ற இருக்கின்றனர் என்று உறுதி மொழியை அழிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இந்திய விமான நிலைய ஆணையமே, நேரடியாக இந்த 3 பழைய விமானங்களையும், அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதற்கான செலவு மற்றும் அபராத தொகைகளை இந்திய விமான நிலைய ஆணையம் வசூலிக்கும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
