ஆளுநரை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் போராட்டம்
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல் வழங்காத ஆளுநரை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். மனித உயிர் குடிக்கும் இந்த ரம்மி சூதாட்டத்துக்கு தடை விதிக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு ஒப்புதலுக்காக இரண்டு முறை ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி, எந்தவித முறையான காரணங்களும் இன்றி தமிழ்நாடு அரசு இயற்றிய அனுப்பிய சட்ட வரைவை திருப்பி அனுப்பி விட்டார்.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆளுநரின் எதேச்சார போக்குக்கு கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் இன்று ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல் வழங்காத ஆளுநர் ஆர் .என். ரவியை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் இறந்தவர்களின் படங்களை ஏந்திய படி ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
பின்னர் ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்தவர்களின் சாம்பலை தபால் நிலையத்தின் மூலம் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு பார்சலில் அனுப்பி வைத்து நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.