புதுச்சேரியில் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் – முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.300 மானியம் வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த காலங்களில் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் . ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. மத்திய அரசு அறிவுறுத்தல்படி, இந்த நடைமுறையை மாற்றி இந்த நிதியாண்டில் முழுமையான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய ரங்கசாமி தலைமையிலான புதுவை அரசு திட்டமிட்டது.
இதற்காக மாநில திட்டக்குழு கூட்டம் ஆளுநர் தமிழிசை தலைமையில் அண்மையில் கூடியது. இதற்கான திட்டக்குழு கூட்டத்தில் பட்ஜெட் தொகையாக ரூ. 11,600 கோடி நிர்ணயித்து மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இது கடந்த பட்ஜெட்டை விட ரூ. 1000 கோடி அதிகமாகும்.
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் தமிழிசை உரையுடன் கடந்த 9ல் தொடங்கியது. இச்சூழலில் மத்திய அரசாங்கம் புதுச்சேரி பட்ஜெட்டுக்கு கடந்த 9ம் தேதி மாலை ஒப்புதல் அளித்தது. முழு பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி நாளை தாக்கல் செய்தார். அதில் சிறப்பம்சமாக புதுச்சேரியில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி, 18 ஆண்டுகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் Fixed Deposit என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
அதேபோல் புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.300 மானியம் வழங்கப்படும், தமிழ் வளர்ச்சியையும், ஆராய்ச்சியையும் மேம்படுத்த உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு புதுச்சேரியில் நடைபெறும், 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும், அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகள் வரை சிபிஎஸ்இ பாடத்திட்டமாக மாற்றப்படும் என பல சலுகைகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.