சாமானிய மக்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களின் தினசரி உணவில் மிக மலிவான விலையில் தங்களின் உடலுக்குத் தேவையான புரதச்சத்தைப் பெற்றுத்தரும் முக்கிய அங்கமாக விளங்குவது முட்டை மட்டுமே. ஆனால், அண்மைகாலமாக முட்டையின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த திடீர் விலை உயர்வு, எளிய மக்கள் மட்டுமன்றி, உடற்பயிற்சி ஆர்வலர்கள் மற்றும் உணவக உரிமையாளர்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது.
காக்கா முட்டை பட வசனமாய் மாறிய நிஜ வாழ்க்கை
“கோழி முட்டை விற்கும் விலைக்கு தினமும் அதை வாங்கித் தர முடியுமா?” என்று ‘காக்கா முட்டை’ திரைப்படத்தில் வரும் பாட்டி கதாபாத்திரம் பேசும் வசனம், இன்று தமிழகத்தின் பல ஏழைக் குடும்பங்களின் நிஜமான குரலாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. வளரும் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் கடுமையான உடல் உழைப்பைக் கொண்ட மக்களுக்கு மிகக் குறைந்த செலவில் ஊட்டச்சத்து அளிக்க மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவது முட்டைதான்.
ஆனால், தற்போதைய விலை ஏற்றத்தால், நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்கள் தங்களது தினசரி உணவுப் பட்டியலில் இருந்து முட்டையின் அளவைக் குறைத்துக் கொள்ளும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கலக்கத்தில் உடற்பயிற்சி ஆர்வலர்கள் மற்றும் பாடி பில்டர்கள்
உடற்பயிற்சி கூடம் செல்பவர்கள் மற்றும் தடகள வீரர்களுக்கு முட்டை என்பது தவிர்க்க முடியாத ஒரு முதன்மை உணவாகும். அபிரின் (உடற்பயிற்சி கூடம் செல்பவர்): “உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க தினமும் குறைந்தது 10 முட்டைகளாவது சாப்பிட வேண்டியுள்ளது. ஆனால், தற்போதைய விலை உயர்வால் ஒரு நாளைக்கு முட்டைக்கு மட்டுமே 80 ரூபாய் வரை செலவாகிறது. இது எங்களைப் போன்றவர்களுக்கு பெரும் நிதிப் சுமையாக மாறியுள்ளது.”
அதேபோல், இறைச்சி உணவுகளைத் தவிர்த்து, புரதச்சத்திற்காக முட்டையை மட்டுமே நம்பியிருக்கும் ‘எக் டேரியன்’ (Eggitarian) முறையைப் பின்பற்றுபவர்களும் இந்த விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பாடி பில்டர் சரவணன் மற்றும் ஸ்ரீ வர்ஷினி ஆகியோர் கவலை தெரிவித்துள்ளனர்.
உணவகங்களில் ஏறிய ‘முட்டை’ உணவுகளின் விலை
ஏற்கனவே சமையல் எரிவாயு (சிலிண்டர்) விலை உயர்வு காரணமாக உணவகங்களில் உணவுகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தற்போது முட்டை விலையும் அதிகரித்துள்ளதால், சாமானியர்கள் விரும்பி உண்ணும் ஆம்லெட், ஆஃப் ஆயில், முட்டை பிரைட் ரைஸ் மற்றும் முட்டை நூடுல்ஸ் போன்ற உணவுகளின் விலையை உணவக உரிமையாளர்கள் உயர்த்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது நடுத்தர வர்க்கத்தினரின் மாதாந்திர பட்ஜெட்டை பதம் பார்த்துள்ளதாக உணவக வாடிக்கையாளர் ரவி வேதனை தெரிவித்துள்ளார்.
அரசின் தலையீடு அவசியமா?
முட்டை என்பது வெறும் உணவுப் பொருள் மட்டுமல்ல, அது கோடிக்கணக்கான எளிய மக்களின் ஆரோக்கிய அரணாகும். எனவே, முட்டை விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், விலையைச் சீராக்கவும் அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
