பூட்டிய வீட்டுக்குள் வருடக்கணக்கில் அடைந்து கிடந்த தாய், மகன் மீட்பு
புதுச்சேரியில் கொரோனா காலத்தில் அடைபட்ட பெண், அவரது மகன் மற்றும் 9 நாய்கள் மீட்கப்பட்டன.
புதுச்சேரி ரெயின்போநகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சசிகலா. அரசு ஊழியரான இவர், கணவரை பிரிந்து தனது 12 வயது மகனுடன் வாழ்ந்து வந்தார். அவர் கொரோனா காலத்திலிருந்தே வீட்டிலிருந்து வெளியே வரவில்லை. பணிக்கு செல்லாததுடன், தனது குழந்தையையும் பள்ளிக்கு அனுப்பவில்லை.
இந்நிலையில் தனது குழந்தை வீட்டிலிருந்து வெளியே வராதது தொடர்பாக அவரது தந்தை குழந்தைகள் நல பாதுகாப்புக்குழுவுக்கு தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் போலீஸாருடன் சென்று வீட்டினுள் சென்று தாயையும், மகனையும் மீட்டனர். தற்போது சிகிச்சைக்காக ஜிப்மரில் சேர்த்துள்ளனர். அவரது வீட்டில் 9 நாய்கள் இருந்துள்ளன. அவை வெளி ஆட்களை பார்த்ததும் ஆக்ரோஷமாக இருந்தன. இதையடுத்து நகராட்சி மூலம் நாய்களை மீட்கும் பணி நடந்தது. அவை பாதுகாப்புடன் அப்புறப்படுத்தப்பட்டன.
இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்புக்குழுவினர் கூறுகையில், “வீட்டருகே வசிப்போர் குறிப்பிட்ட நாளுக்கு பின் தென்படவில்லை என கூறினர். இரு ஆண்டுகளாக வீட்டில் இருந்ததால் துர்நாற்றம் வீசியுள்ளது. அத்துடன் உணவு டெலிவரி நிறுவனங்களில் பதிவு செய்து 3 வேளையும் சாப்பிட்டு வந்ததால் வீடு முழுக்க குப்பைகள் இருந்தன” என்றனர்.