ஆருத்ரா நிறுவன மோசடி- ஆர்கே சுரேஷ் வங்கி கணக்கு முடக்கம்
ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் நடிகர் ஆர்.கே சுரேஷின் வங்கி கணக்கை முடக்கி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சந்தேகம்படும்படியான பணபரிவர்த்தனை இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் முடக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம் 2438 கோடி மோசடி செய்த வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே சுரேஷ் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.

பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆருத்ரா நிறுவன மேலாளர்களில் ஒருவராக இருந்த ரூசோ படத்தயாரிப்பாளர் ஆர் கே சுரேசுடன் இணைந்து புதிய படத்தயாரிப்பில் ஈடுபட்ட போது, பல கோடி பரிவத்தனை நடைபெற்றுள்ளதை கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அது ரூசோவின் சொந்த பணம் என்றும் ஆருத்ரா மோசடியில் சம்பாதித்த பணம் இல்லை எனவும் ரூசோ வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் முறைகேடான பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்கு முடக்கியுள்ளதாக பொருளாதார குற்றச்சாட்டு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.