பவானி அருகே அனுமதியின்றி செயல்பட்ட கிளினிக் பூட்டி சீல் வைப்பு
ஈரோடு மாவட்டத்தில் பவானியை அடுத்துள்ள ஆர்.என்.புதூரில் பாவா கிளினிக் என்ற பெயரில் கடந்த பல வருடங்களாக கிளினிக் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த கிளினிக் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக ஈரோடு மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை இணை இயக்குநர் அம்பிகாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை இணை இயக்குநர் அம்பிகா தலைமையிலான மருத்துவத்துறையினர் ஆர்.என்.புதூரில் உள்ள சம்மந்தப்பட்ட கிளினிக்கிற்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளார்.

இந்த சோதனையில் மருந்துகள், ஊசிகள், மாத்திரைகள் என ஏராளமானவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த பைரோஸ் (வயது35) என்பவர் கடந்த சில வருடங்களாக கிளினிக் செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் மருந்துகளை பாதுகாப்பற்ற முறையில் கையாண்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து கிளினிக் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சித்தோடு போலீசில் சுகாதாரத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பைரோஸ் முறையாக மருத்துவ படிப்பு படித்து தான் கிளினிக்கை நடத்தி வந்தாரா? என்பது குறித்து மக்கள் நல்வாழ்வு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


