ஆன்லைன் ரம்மி Skill Game? ஆளுநருக்கு அப்பாவு கேள்வி
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை தாமதப்படுத்தி, ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கான காரணம் தெரியவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை இயற்ற தமிழக சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை தாமதப்படுத்தி, ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கான காரணம் தெரியவில்லை. ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம், அல்லது விளக்கம் கேட்கலாம். அவசர சட்டத்திற்கும், சட்ட முன்வடிவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு சட்டம் கொண்டுவர, சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என, எந்த சட்டத்தின் அடிப்படையில் ஆளுநர் கூறினார் என தெரியவில்லை. சட்டமன்றத்திற்கு களங்கம் ஏற்படும் வகையிலான வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்திருக்கலாம். ஆன்லைன் சூதாட்டத்தை Skill game என கூறுகிறார்கள். இந்த விளையாட்டில் Skill இருப்பதாக தெரியவில்லை.தொழிலதிபர்கள்தான் ‘Skill’ஆக இருந்து, பொதுமக்களின் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் விவகாரத்தில் ஆளுநருக்கு அழுத்தம் உள்ளது” என்றார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இணைய வழி சூதாட்டங்களை தடை செய்தல் மற்றும் இணைய வழி விளையாட்டுகள் முறைப்படுத்துதல் தொடர்பாக சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் சில சந்தேகங்களை கேட்டபோது நானும், உள்துறை, சட்டத்துறை செயலாளர்கள் இணைந்து தெளிவான விளக்கத்தை தந்திருந்தோம். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இதற்கு சட்டம் இயற்ற அதிகார்ர் இல்லை என்று திருப்பி அனுப்பி இருக்கிறார்.2021&ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு இதுவரை 47 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் 18 பேர் புதிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.