Homeசெய்திகள்தமிழ்நாடுஅடிப்படை பணிகளை நிறுத்தி விட்டு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்க திட்டம்? தமிழக அமைச்சரவை...

அடிப்படை பணிகளை நிறுத்தி விட்டு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்க திட்டம்? தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு!

-

- Advertisement -

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட உள்ள முதல் பட்ஜெட் என்பதால், பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில், முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 2026-27ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

we-r-hiring

வாக்குறுதிகளுக்கு முக்கியத்துவம்:

நடைபெற்று முடிந்த 17வது சட்டசபை தேர்தலில் தவெக பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்திருந்தது. குறிப்பாக, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500, ஆண்டுக்கு 6 இலவச காஸ் சிலிண்டர்கள், திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை, ரூ.20 லட்சம் கல்வி கடன், குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு மற்றும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம்தோறும் ரூ.4 ஆயிரம் நிதியுதவி போன்ற திட்டங்கள் தவெக தேர்தல் அறிக்கையில் முக்கிய இடம் பிடித்திருந்தன.

இந்த வாக்குறுதிகளை வரவிருக்கும் முதல் பட்ஜெட்டிலேயே நடைமுறைப்படுத்துவது குறித்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய விவாதங்கள் நடைபெற்றதாகத் தெரிகிறது.

கட்டமைப்பு நிதி குறைக்கப்படுகிறதா?

பொதுமக்களைக் கவரும் வகையிலான இந்த இலவச மற்றும் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்குப் பெருமளவில் நிதி தேவைப்படுகிறது. இதனால், சாலை உள்ளிட்ட தமிழகத்தின் அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் தேவைகளுக்கான நிதி ஒதுக்கீட்டைக் சற்றே குறைத்துவிட்டு, மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கலாமா என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு செலவுகளைச் சுருக்கி, மகளிர் நலத்திட்டங்களில் கவனம் செலுத்த அமைச்சரவையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல்:

பட்ஜெட் அறிவிப்புகள் மட்டுமின்றி, தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கான அனுமதிகள் மற்றும் புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

கடந்த சில நாட்களாகவே நிதிநிலை அறிக்கை தொடர்பாகப் பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனை வரும் 22ம் தேதி வரை நீடிக்க உள்ள நிலையில், தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி குறித்தும் இன்றைய கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தவெக அரசின் இந்த முதல் பட்ஜெட்டில் தேர்தல் வாக்குறுதிகள் எந்த அளவிற்கு நிறைவேற்றப்படப் போகின்றன என்பதைப் பார்க்க ஒட்டுமொத்த தமிழகமே ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது.

MUST READ