Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவள்ளூர் அருகே தனியார் ஏ.டி.எம் மையத்தில் பயங்கர தீ விபத்து... பல லட்சம் ரூபாய் மதிப்பிலான...

திருவள்ளூர் அருகே தனியார் ஏ.டி.எம் மையத்தில் பயங்கர தீ விபத்து… பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் எரிந்து சேதம்

-

- Advertisement -

திருவள்ளூர் அருகே தனியார் ஏ.டி.எம்.மில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கப் பணம் எரிந்து சேதம் அடைந்தது.

திருவள்ளூர் அருகே கனகம்மாசத்திரம் பஜார் வீதியில் எச்.டி.எப்.சி வங்கி ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம் மையத்தில் இன்று மாலை 6.30 மணியளவில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்றபோது, அறையில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. அதனால் அச்சமடைந்த வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மையத்தில் இருந்து உடனடியாக வெளியேறினர். அதற்குள்ளாக ஏடிஎம் மையத்தில் தீ பற்றி மளமளவென எரியத் தொடங்கியது. மேலும், ஏ.டி.எம். மையத்தின் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளுக்கும், மளிகைக் கடைக்கும் தீ பரவியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் திருத்தணி, திருவள்ளூர் பகுதிகளிலிருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும் இந்த தீ விபத்தில் ஏ.டி.எம். மையம் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.

தீ விபத்து குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், வங்கி அதிகாரிகள் சோதனைக்கு பிறகே தீயில் எரிந்து சேதமடைந்த பணத்தின் மதிப்பு எவ்வளவு என தெரியவந்தது. தீ விபத்து காரணமாக கனகம்மா சத்திரம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

MUST READ