பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மாலையும் கழுத்துமாக வந்த காதல் ஜோடியால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பழனிபுரத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மண்மலை கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் பிரம்மா என்பவரை கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரம்மாவும், புவனேஸ்வரியும் தங்களது காதலை வெளிப்படுத்தும் விதமாக சின்னசேலம் அருகே மண்மலை கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் நேற்று அதிகாலை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
இதனை அடுத்து இருவரும் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், தங்களுக்கு பிரச்சனை வரும் என்பதாலும் தங்கள் இருவருக்கும் பாதுகாப்பு வேண்டுமென கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மாலையும் கழுத்துமாக மனக்கோலத்தில் வந்து பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.