சென்னை கொருக்குப்பேட்டை மேம்பாலம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் பிடித்த தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.


கொருக்குப்பேட்டை பேசின் பிரிட்ஜ் ஆர் கே நகர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறி மற்றும் ஆயுதங்களோடு சுற்றி தெரியும் போதை ஆசாமிகளின் அடாவடி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது . சில தினங்களுக்கு முன்பு ஓடும் விரைவு ரயிலில் மத்திய பாதுகாப்பு படையில் பணிபுரிந்த காவலரிடம் மொபைல் பறிக்க முயற்சித்ததில் அவர் கீழே விழுந்தார். அவரை மீட்ட ரயில்வே போலீசார் அவரை வேறு ரயிலில் ஏற்றி வழி அனுப்பி வைத்தனர்.
இதே போன்று நேற்று அதிவிரைவு ரயில் படிக்கட்டில் அமர்ந்து மொபைல் பார்த்துக் கொண்டிருந்த வட மாநில இளைஞர் இடமிருந்து பேசின் பிரிட்ஜ் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென இருபது வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர், அவர் கையில் இருந்தசெல்போனை பறிக்க முயற்சித்தார். அப்பொழுது அவர் ஓடும் ரயிலில் இருந்து கீழே தண்டவாளத்தில் விழுந்து தலையில் அடிப்பட்டு உயிரிழந்தார்
கொருக்குப்பேட்டை ஹரி நாராயணபுரம் மீனம்மாள் நகர் பகுதிகளில் இருப்பு பாதைகளுக்கு ஓரத்தில் குடிசைப் பகுதிகள் அதிகமாக இருப்பதால் போதை ஆசாமிகளின் அட்டூழியத்தால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. 15 வயது 17 வயது இளம் சிறார்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இதுபோன்று வடமாநில தொழிலாளர்களிடம் கைவரிசை காட்டுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொருக்குப்பேட்டை மேம்பாலம் அருகே இரண்டு நபர்கள் வழிப்பறியில் ஈடுபட முயற்சித்ததாக கூறப்படுகிறது. அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்த நிலையில், ஒருவர் மட்டும் தப்பி ஓடி விட்டார். அதில் 20 வயது மதிக்கத்தக்க மற்றொரு இளைஞரை மட்டும் பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
