“சட்டமன்றத்தில் நிதி அமைச்சராக இருக்கக்கூடிய மரியவில்சன், பள்ளி இடைநிற்றல் மற்றும் லஞ்சம் தொடர்பான விவகாரத்தில் அன்பில் மகேஷ் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ‘நானே லஞ்சம் கொடுத்தேன்’ என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுப்பதும் தவறு, வாங்குவதும் தவறு. லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக்கொண்ட அடுத்த நிமிடமே அவர் அமைச்சர் பதவியில் நீடிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டார். அவரைப் பிடித்து உள்ளே போட வேண்டும். அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மூத்த பத்திரிகையாளர் செந்தில்வேல் வலியுறுத்தியுள்ளார்.
தகுதியற்ற குற்றச்சாட்டுகள்
“மரியவில்சனுக்கு அவர் துறை சார்ந்த எந்த அறிவும் கிடையாது. 16,000 கோடி ரூபாய் உள்ளே வந்துவிட்டது என்றார். அமைச்சர் தங்கம் தென்னரசு எந்த வழிகளில் வந்தது எனக் கேட்டதற்கு, ‘கனவு கண்டேன், வந்திருக்கும் என நினைக்கிறேன்’ என்று பதிலளிக்கத் தெரியாமல் உட்கார்ந்துவிட்டார். சொந்தக் குடும்பத்தினர் மீது வன்முறையை ஏவி, கெட்ட வார்த்தைகளால் திட்டிய இவருக்கு மற்றவர்களைக் குற்றம்சாட்ட என்ன உரிமை இருக்கிறது? 2012-இல் தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டபோது 10 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பின்னணி இவருக்கு உள்ளது.

வாக்குறுதிகளை ஏமாற்றிய அரசு: தேர்தல் வாக்குறுதிகள் அனைத்திலும் அல்வா கொடுத்து ஏமாற்றியுள்ளனர்.
கேஸ் சிலிண்டர்: 6 சிலிண்டர் இலவசம் என்று சொல்லிவிட்டு இப்போது 3 சிலிண்டர் மட்டுமே தருகிறார்கள். அதிலும் மாதம் ₹21,000-க்கு மேல் சம்பளம் வாங்கினால் இந்தச் சலுகை கிடையாது என்கிறார்கள். இன்றைய விலைவாசியில் ₹20,000 வைத்து குடும்பம் நடத்த முடியுமா?
இலவச பேருந்துப் பயணம்: தமிழ்நாடு முழுவதும் எந்தப் பேருந்திலும் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்று கூறிவிட்டு, இப்போது நகர மற்றும் மாநகரப் பேருந்து எல்லைக்குள் மட்டும் என சுருக்கி ஏமாற்றிவிட்டனர்.
காவிரி நீர் விவகாரம், மின்கட்டண உயர்வு, வடமாநில ஆசிரியர் விவகாரம், அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகை நிலுவை போன்ற முக்கியப் பிரச்சினைகளை மக்கள் மத்தியிலிருந்து மடைமாற்றவே இதுபோன்ற விவாதங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.”

அன்பில் மகேஷ் குறிவைக்கப்படுவதன் பின்னணி
“இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒன்றிய பாசிச பாஜக அரசின் குலக்கல்வித் திட்டமான தேசியக் கல்விக் கொள்கையையும் (NEP), பிஎம் ஸ்ரீ (PM-SHRI) திட்டத்தையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் உறுதியாக எதிர்த்தார். திமுக ஆட்சிக் காலத்தில் ‘நான் முதல்வன்’, ‘புதுமைப் பெண்’, ‘தமிழ்ப் புதல்வன்’, ‘உயர்வுக்குப் படி’ போன்ற திட்டங்கள் மூலம் சாமானிய, பழங்குடியின மாணவ-மாணவிகள் ஐஐடி (IIT), ஐஐஎம் (IIM) மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குப் படிக்கச் சென்றனர். பெரியாரியக் கொள்கைகளின் வழியில் நின்று சாதித்ததை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அமைப்புகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவேதான், அன்பில் மகேஷ் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறார்.”
அறநிலையத்துறை மீட்பும் முறைகேடுகளும்
“அறநிலையத்துறை அமைச்சராக சேகர் பாபு இருந்தபோது ₹5,000 கோடிக்கும் அதிகமான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டன. ஆனால் தற்போதைய ஆட்சியில், ஆட்சிக்கு வந்த 100 நாட்களிலேயே ₹100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ₹2 கோடிக்கு ஏமாற்றிப் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றத் தலையீட்டிற்குப் பின் பத்திரம் ரத்து செய்யப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல, ‘தாவூக அரசு குதிரைப் பேரத்தில் ஈடுபடுகிறது, 25 எம்.எல்.ஏ-க்களை இழுக்கப் பார்க்கிறது’ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) துணைப் பொதுச்செயலாளரே குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் நூலகங்களைத் திறந்து, இளைஞர்களை வெளிநாடுகளுக்குப் படிக்க அனுப்பியவர்களைப் பார்த்து, தியேட்டர் வாசலில் இருந்து வந்தவர்களும், விசிலடித்துக் கொண்டிருந்தவர்களும் கேள்வி எழுப்புவது காலத்தின் கொடுமை” என்று செந்தில்வேல் குறிப்பிட்டுள்ளார்.
