பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், அங்கு ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மாற்றுத் தொழில் திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல், சட்டப்படி சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
பரந்தூர் திட்டம் மற்றும் ரத்து பின்னணி
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 5,750 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை அப்போதைய அரசு தீவிரமாக மேற்கொண்டு வந்தது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்ற நிலையில், விவசாய நிலங்களைப் பறிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பரந்தூர் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் 1,000 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, பரந்தூர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. தொடர்ந்து, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்து முதல்வர் விஜய் உத்தரவிட்டார். மேலும், விவசாய நிலங்களுக்கும் குடியிருப்புகளுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் மாற்று இடம் தேர்வு செய்யப்படும் என்றும் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு
இதற்கிடையே, பரந்தூரில் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மாற்றுத் தொழில் திட்டங்கள் உருவாக்கப்படும் எனத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சட்டப்பேரவையில் நேற்று அறிவித்தார்.
சட்டப்படி நிலத்தைத் திரும்பத் தருக: பெ.சண்முகம்
அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “பரந்தூர் விமான நிலையத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது எனச் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதற்கு, மாற்றுத் தொழில் திட்டங்களுக்குப் பயன்படுத்தப் போவதாகத் தொழில்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.
நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியேற்றச் சட்டம் 2013-ன் படி, குறிப்பிட்ட ஒரு திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலம் 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்படவில்லை என்றாலோ அல்லது அத்திட்டம் கைவிடப்பட்டாலோ, அந்த நிலத்தை மீண்டும் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும். அதை வேறு திட்டத்திற்குப் பயன்படுத்த முடியாது.
எனவே, சட்டத்திற்கு விரோதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது. கையகப்படுத்திய நிலங்களை உரிய விவசாயிகளிடம் மீண்டும் ஒப்படைக்கத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீளப் பெறுவது தொடர்பாக எழுந்திருக்கும் இந்த கோரிக்கை பரந்தூர் பகுதியில் மீண்டும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து: அவசரமாக எடுக்கப்பட்ட முடிவல்ல – அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
