விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குவதைத் தடுக்க கடும் நடவடிக்கை தேவை — அமமுக பொதுச்செயலாளர் வலியுறுத்தல்
தமிழகத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்ச வசூல் தங்குதடையின்றி தொடர்வதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் ஊழலுக்கு எதிரான பேச்சுகள் வெறும் மேடை வசனமாகவே இருக்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கஷ்டப்பட்டு விளைவித்த நெல்லை விற்பனை செய்ய வரும் விவசாயிகள், கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவல நிலை நீடிப்பதாகக் சுட்டிக்காட்டியுள்ளார்.

டிடிவி தினகரன் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
சினிமா வசனமாகும் முழக்கங்கள்: நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்ச வசூல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. லஞ்சத்திற்கு எதிராக முதலமைச்சர் கொடுக்கும் குரலும் முழக்கங்களும் நடைமுறைக்கு உதவாத, வெறும் சினிமா வசனம் தானா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
வீர வசனங்களால் ஊழல் ஒழியாது: கடுமையான கண்காணிப்பும், தவறு செய்பவர்கள் மீது உடனடி நடவடிக்கைகளுமே ஊழலை ஒழிக்குமே தவிர, மேடைகளில் பேசப்படும் வீர வசனங்களால் ஊழலை ஒருபோதும் ஒழிக்க முடியாது என்பதை அரசு இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.”
விவசாயிகள் நலன் காக்க கோரிக்கை: இரவு பகலாகப் பாடுபட்டு விவசாயிகள் விளைவித்த நெல்லை, எந்தவித லஞ்ச வசூலும் இன்றி உடனடியாகக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு விரைந்து துரிதப்படுத்த வேண்டும்.”
கள ஆய்வுக்குக் கோரிக்கை
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்து உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தவறிழைக்கும் ஊழியர்கள் மீது தாக்ஷண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் அரசை வலியுறுத்தியுள்ளார்.
