தமிழ்நாட்டில் முன்னுரிமை ரேஷன் அட்டைகளுக்கான E-KYC சரிபார்ப்புப் பணிகள் 96.21 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பயனாளர்களுக்காக வரும் 29-ம் தேதி சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் போலி ரேஷன் அட்டைகளைக் கண்டறியவும், தகுதியான நபர்களுக்குத் தடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் ரேஷன் அட்டைதாரர்களின் விரல்ரேகை மற்றும் ஆதார் விவரங்களைப் பதிவு செய்யும் E-KYC புதுப்பித்தல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காலை 9 முதல் மாலை 5 மணி வரை முகாம்
தற்போதைய நிலவரப்படி, மாநிலத்தில் உள்ள முன்னுரிமை ரேஷன் அட்டைகளில் (PHH) 96.21 சதவீதப் பணிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளன. இதில் விடுபட்ட குடும்ப உறுப்பினர்கள் E-KYC பதிவை எளிதாகச் செய்து முடிக்க வசதியாக, வரும் 29-ம் தேதி சனிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
அன்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இம்முகாம்கள் செயல்படும். இதில் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் சென்று கைரேகை பதிவு செய்து E-KYC பணிகளை முடித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் இன்றி பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களது ரேஷன் அட்டைகளுக்கான E-KYC சரிபார்ப்பை விரைந்து நிறைவு செய்யுமாறு கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
