தமிழக அரசியல் களம் எப்போதுமே கூட்டணிகளின் தராசுத் தட்டுகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், அண்மைய சட்டமன்ற விவாதங்களும், அரசியல் களத்தின் நகர்வுகளும், வழக்கமான கூட்டணிக் கணக்குகளுக்கு அப்பாற்பட்ட ஒரு புதிய திருப்பத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை உணர்த்துகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தைச் (தவெக) சேர்ந்த நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் முன்வைத்த லஞ்சப் புகார்கள் தொடர்பான கருத்துகளும், அதற்குப் பதிலடியாகத் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெளிப்படுத்தி வரும் எதிர்வினைகளும் சாதாரண சட்டமன்ற விவாதங்கள் மட்டுமல்ல; அவை எதிர்வரும் அரசியல் மாற்றங்களின் முன்னோட்டமாகும்.

மாற்றுக்கட்சி உறுப்பினர்களும் “தனித்து நிற்கும்” வியூகமும்
தவெக தரப்பில் மூத்த தலைவர் செங்கோட்டையன், “மாற்றுக்கட்சியிலிருந்து மேலும் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களுடன் இணையத் தயாராக இருக்கிறார்கள்” எனக் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையைக் காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) உள்ளிட்ட அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பதற்குப் பின்னால் உள்ள அரசியல் பதற்றம் மிகத் தெளிவானது.
கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்தவரை, ஆளுங்கட்சியோ அல்லது பிரதான எதிர்க்கட்சியோ தங்களைச் சார்ந்து மட்டுமே இருக்க வேண்டும் என்பதே முதன்மையான எதிர்பார்ப்பு. ஒரு கட்சி தனது சொந்த பலத்தில் பெரும்பான்மையை நோக்கி நகர முயலும்போது, கூட்டணிக் கட்சிகளின் பேரம் பேசும் சக்தியும் செல்வாக்கும் இயல்பாகவே குறையத் தொடங்குகிறது. 17 சட்டமன்றத் தொகுதிகளின் வெற்றி-தோல்வி கணக்குகளும், தவெகவின் இந்தத் தனித்து நிற்கும் வியூகமுமே தோழமைக் கட்சிகளின் இந்தத் திடீர் அதிருப்திக்கு முக்கியக் காரணமாகும்.
சட்டம்–ஒழுங்கு மற்றும் நிர்வாகச் சவால்கள்
மற்றொருபுறம், பத்திரப்பதிவுத் துறை, கடவுச்சீட்டு (Passport) சரிபார்ப்பு போன்ற அன்றாட அரசுத் துறைகளில் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் சாமானிய மக்களின் அனுபவங்கள் குறித்த விமர்சனங்களும் காரசாரமாக எழுப்பப்பட்டு வருகின்றன. அரசு இயந்திரம் லஞ்சமற்ற நிர்வாகத்தை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அதேபோல், தோழமைக் கட்சிகளின் போராட்டங்களுக்குத் தடை விதிப்பது, தாசில்தார் மூலம் போராட்டக்காரர்களைக் கணக்கெடுப்பது போன்ற நிர்வாக ரீதியான கெடுபிடிகள் கூட்டணி உறவுகளிடையே மேலும் விரிசலை ஏற்படுத்துகின்றன. அதிகார வர்க்கத்தை நம்பி ஆட்சியை நடத்துவதா அல்லது அரசியல் தோழமைகளின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்ப்பதா என்ற தர்மசங்கடமான சூழல் ஆளுந்தரப்பிற்கு உருவாகியுள்ளது.
மேலும், ஆட்சிப் பொறுப்பேற்று சில மாதங்களே நிறைவடைந்துள்ள சூழலில், இன்னும் வரவிருக்கும் நான்கரை ஆண்டுகால ஆட்சியை எந்தவிதக் கூட்டணிக் முட்டுக்கட்டைகளும் இன்றித் “திடமாக ஓட்ட வேண்டும்” என்ற தவெகவின் எதிர்பார்ப்பு ஒருபுறம்; தங்களின் அரசியல் இருப்பையும் செல்வாக்கையும் தக்கவைத்துக்கொள்ளத் துடிக்கும் கூட்டணிக் கட்சிகளின் பிரஷர் பாலிடிக்ஸ் மறுபுறம். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பார்கள். ஆனால், கூட்டணிகளின் நிழலில் வாழாமல் சொந்தக் காலில் நிற்கத் துடிக்கும் ஒவ்வொரு அரசியல் நகர்வும், தமிழகத்தில் புதியதொரு அரசியல் சமன்பாட்டை உருவாக்கக் காத்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை!
