அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் 22ஆம் தேதி அன்று அமைச்சர்கள் குழு பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசியர் சங்கங்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தக் கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைக்கு தீர்வு காணும் விதமாக பழைய ஓய்வூதிய திட்ட பங்களிப்பு, ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயவும், மாநில அரசின் நிதி நிலையினை பணியாளர்களின் ஓய்வூதிய கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தத் தக்க திட்டத்தை தேர்வு செய்ய மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையிலான குழு கடந்த பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. இந்த குழு அரசு பணியாளர் சங்கங்களுடன் பல கட்டங்களாக ஆலோசனைகள் நடத்தியதுடன், எல்ஐசி மற்றும் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுடனும் பல்வேறு கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தி இடைக்கால அறிக்கையை கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்தது.

இடைக்கால அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர்கள் எ.வ.வேலு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது மூன்று ஓய்வூதிய திட்டங்களில், எது அரசு மற்றும் அரசு ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது தொடர்பாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டதை ஆய்வு செய்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் 22ஆம் தேதி அன்று அமைச்சர்கள் குழு பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வரும் 22.12.2025 அன்று காலை 10 மணிக்கு சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் உள்ள ஆலோசனைக் கூடத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


