சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, பெற்றோர்கள் பள்ளி முன்பாக கூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை திருவொற்றியூர் கிராத் தெருவில் விக்டரி மெட்ரிக்குலேஷன் என்னும் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 1,200க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் ஒரு கட்டிடத்தின் 3வது தளத்தில் ஆய்வுக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 25ம் தேதி அன்று பள்ளியில் திடீரென ரசாயன வாயுக் கசிவு ஏற்பட்டு, வகுப்பறைகளுக்குள் பரவத் தொடங்கியது. இதனால் மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், கண் மற்றும் தொண்டை எரிச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டன. சில மாணவிகள் மயக்கமடைந்து விழுந்ததால், அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ்கள் மூலம் பாதிக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட மாணவிகளை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே வாயுக்கசிவு குறித்து பள்ளியின் ஆய்வுக் கூடத்தில் தொருவொற்றியூர் தாசில்தார், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஆய்வு செய்தனர். பள்ளி முழுவதும் சோதனை செய்த பின்னரும், வாயுக் கசிவு ஏற்படக் காரணம் என்ன என்பதைக் கண்டறியமுடியவில்லை.
இதன்காரணமாக அந்தப் பள்ளிக்கு 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. 10 நாட்களுக்கு பின் இன்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் 2 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து 6 மாணவிகள் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக அடுத்தடுத்து 3 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு மாணவிகளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பெற்றோர் பள்ளி முன்பாக கூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 10 நாட்களாகியும் வாயுக்கசிவுக்கான காரணத்தை கண்டறியவில்லை, எப்படி மீண்டும் மாணவிகளுக்கு மயக்கம் வாந்தி ஏற்பட்டது? , பள்ளி நிர்வாகம் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் பள்ளி திறக்கப்பட்டதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டுகின்றனர். இந்தனால் திருவொற்றியூர் கிராம தெரு பகுதியை பரபரப்பாக காணப்பட்டது.