மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
மணிமுத்தாறு அருவியில் பராமரிப்பு பணிகள் மற்றும் வெள்ளப்பெருக்கு என சுமார் 8 நாட்கள் தடைக்கு பின் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவியில் ஆண்டுதோறும் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவதால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஜுலை 28 -ந் தேதி முதல் 1 -ந் தேதி வரை அருவியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக கூறி சுற்றுலா பயணிகள் குளிக்க 4 நாட்கள் வனத்துறையினர் தடைவிதித்தனர், தொடர்ந்து 2 -ந் தேதி அனுமதி வழங்கப்பட இருந்த நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக கனமழை பெய்ததால் கடந்த 2 -ந் தேதி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது அருவியில் நீர்வரத்து குறைந்ததை அடுத்து இன்று முதல் குளிக்க அனுமதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். பராமரிப்பு பணிகள் மற்றும் வெள்ளப்பெருக்கை யொட்டி சுமார் 8 நாட்களுக்கு பிறகு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.