ஜி 20 மாநாடு காரணமாக வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை தொல்லியல் துறை அறிவித்துள்ளது.


சர்வதேச ஜி20 மாநாடு நமது நாட்டில் வரும் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி மாதம் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 100 விருந்தினர்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், மேற்கண்ட மாநாட்டில் பங்கேற்க வரும் வெளிநாட்டினர் பிப்ரவரி 1ம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணி வரை மாமல்லபுரத்தில் உள்ள பல்லவ மன்னர்களின் கலைச்சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை கண்டு ரசிக்க, தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதனால், வெளிநாட்டினரின் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜி 20 மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் வர உள்ளதால், வரும் பிப்ரவரி 1ஆம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிப்பதாக மத்திய தொல்லியல் துறை சார்பில் புரதான சின்னங்கள் உள்ள நுழைவாயில் முன்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் வரும் 1ஆம் தேதி சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வரவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.
