“அமித்ஷா இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்!”- உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை
நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தி, ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒன்றிணைப்பதாக ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கூறுவது அபத்தமானது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று இந்தி தினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இதையடுத்து இந்தி தினத்துக்கு வாழ்த்து தெரிவித்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவில் உள்ள பல மொழிகளை ஒருங்கிணைக்க இந்தி உதவுகிறது. சுதந்திரம் முதல் தற்போது வரை நாட்டை ஒன்றிணைத்ததில் இந்தி மொழியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது, அதிகாரப்பூர்வ மொழியான இந்தி மற்றும் பிராந்திய மொழிகளை மேம்படுத்த உறுதியேற்போம் எனக் கூறியிருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது என்று வழக்கம் போல தனது இந்தி மொழிப் பாசத்தை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பொழிந்துள்ளார். தமிழ்நாட்டில் தமிழ் – கேரளாவில் மலையாளம். இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது. இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம்தான் அமித்ஷாவின் கருத்து” எனக் குறிப்பிட்டுள்ளார்.