உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- உத்தரபிரதேச மாநிலம், ஜான்சியில் மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவ வார்டின் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று இரவு ஏற்பட்ட தீவிபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகியும், மூச்சுத் திணறியும் உயிரிழந்த பரிதாப செய்தி அதிர்ச்சியையும், கவலையையும் தருகிறது. மேலும் 16 குழந்தைகள் பலத்த தீக்காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத காரணத்தாலும், நிர்வாக அலட்சியத்தாலும் இத்தகைய கொடூர உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குழந்தைகளை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உத்தரபிரதேச மாநில அரசு நிவாரணம் அறிவித்திருக்கிறது. இழப்பீட்டு தொகை வழங்குவதால் மட்டும் அவர்களுடைய இழப்பை ஈடு செய்ய முடியாது. இத்தகைய சம்பவங்கள் எதிர் காலத்தில் நடைபெறாமல் இருக்க உத்தரபிரதேச யோகி ஆதித்யநாத் அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்