ஆன்லைன் ரம்மி மசோதாவை திருப்பி அனுப்பியது ஆளுநரின் அதிகார மமதை- வைகோ
ஆன்லைன் ரம்மி மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரின் செயலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளைத் தடைசெய்து 2022 அக்டோபர் 1 ஆம் தேதி, தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. பின்னர் ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசரச் சட்டத்துக்கு மாற்றாக அக்டோபர் 19 ஆம் தேதி சட்டப் பேரவையில் சட்டமுன்வரைவு நிறைவேற்றப்பட்டு, 2022 அக்டோபர் 28 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.இரவி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
27 நாட்கள் மவுனத்திற்குப் பிறகு, இந்தச் சட்டம் குறித்து தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டு நவம்பர் 27 இல் ஆளுநர் இரவி கடிதம் அனுப்பினார். உடனடியாக 24 மணி நேரத்தில் அரசு சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது. டிசம்பர் 02, 2022 இல் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ஆளுநரை நேரில் சந்தித்து, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்கக் கேட்டுக்கொண்டார்.
அதன்பிறகு, ஆளுநர் ஆர்.என். இரவியை, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களை நடத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். இதனால் ஆளுநர் ஆன்லைன் ரம்பி தடைச் சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் வழங்காமல் ஐந்து மாதங்களாக கிடப்பில் போட்டுவிட்டார்.
இந்நிலையில், நேற்று மார்ச் 8 ஆம் தேதி, இச்சட்ட முன்வரைவு மீது சில கேள்விகளை எழுப்பி அரசுக்கு திருப்பி அனுப்பி இருக்கிறார்.
ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுகளால் தமிழ்நாட்டில் மட்டும் 47 பேர் தற்கொலை செய்து கொண்டனர். ஆளுநர் ஆர்.என்.இரவி அதிகார மமதையில் கிடப்பில் போட்டதன் விளைவாக இவர்களின் உயிர் பறிபோனது. இதற்கு ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டும்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததால், அதனைத் தடை செய்வது தொடர்பாக ஆய்வு செய்திட சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் தமிழ்நாடு அரசு குழு ஒன்றை அமைத்தது.
இந்தக் குழு பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு, ஏற்கனவே உள்ள விதிகளின்படி இதைக் கட்டுப்படுத்த இயலாது என்பதால், புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்தது.
அதன்பின்னர்தான் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஒழுங்குபடுத்துதல் அவசரச் சட்ட முன்வரைவு ஒன்றை உருவாக்கியது.
அவசரச் சட்டம் காலாவதி ஆவதற்கு முன்பாக சட்ட முன்வரைவை நிறைவேற்றி அனுப்பியும் ஆளுநர் ஆர்.என்.இரவி 142 நாட்கள் கழித்து தற்போது திருப்பி அனுப்பி வைத்து இருப்பது கண்டனத்திற்குரியது.
தமிழ்நாடு அரசு ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட முன்வரைவில் எந்த மாற்றமும் இல்லாமல் மீண்டும் சட்டப் பேரவையில் நிறைவேற்றி, ஆளுநருக்குத் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும். அப்படி மீண்டும் அனுப்பினால் ஆளுநர், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 200இன் படி ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள 21 சட்ட மசோதாக்களுக்கும் ஆளுநர் ஆர்.என்.இரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். ஆளுநர் அரசியலமைப்புச் சட்டப்படி தனது கடமையை நிறைவேற்றாமல், இந்துத்துவ சனாதன சக்திகளின் பிரச்சார செயலாளராக செயல்பட்டு வருவதை அனுமதிக்க முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.