Homeசெய்திகள்தமிழ்நாடுத.வெ.க மாநாட்டிற்கு அழைத்துச்சென்ற கட்டணத்தை தராமல் மிரட்டல்... சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வேன் ஓட்டுநர்கள்...

த.வெ.க மாநாட்டிற்கு அழைத்துச்சென்ற கட்டணத்தை தராமல் மிரட்டல்… சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வேன் ஓட்டுநர்கள் புகார்

-

- Advertisement -

த.வெ.க மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்துச்சென்ற கட்டணத்தை வழங்காமல், மிரட்டல் விடுப்பதாக வேன்ஓட்டுநர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த 27ஆம் தேதி நடந்தது. அந்த கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசிய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கட்சியின் தொண்டர்கள் வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களை வாடகைக்கு எடுத்து வந்து மாநாட்டில் கலந்து கொண்டனர்.

தவெக மாநாடு: வாகனங்கள் சுங்கச் சாவடிகளில் கட்டணமின்றி அனுமதி..!!

இந்த நிலையில் மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்துவந்த வேன் ஓட்டுனர்கள் திடீரென சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரை அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். சென்னையைச் சேர்ந்த சக்திவேல், மணிகண்டன் ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.

அதில், தாங்கள் ஆக்டிங் ஓட்டுனர்கள் என்றும், தமிழக வெற்றிக்கழகத்தின் அபிராமபுரம் பகுதி துணைச் செயலாளர் மோகன் என்பவர் தங்களை அணுகி தவெக மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்துச்செல்ல வேன் ஓட்ட வேண்டும் என தங்களை அழைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பளத்தொகை பேசி விட்டு சென்றோம். 27 ஆம் தேதி தொண்டர்களை அழைத்துக்கொண்டு மாநாட்டிற்கு செல்லும்போதே வாகனத்திற்கு தொண்டர்கள் மதுகுடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டனர். பிறகு தொண்டர்களை அழைத்துக்கொண்டு மாநாட்டில் இறக்கி விட்டோம்.

ஆனால் தவெக நிர்வாகி மோகன் கூறியபடி சாப்பாடு எதுவும் வாங்கித் தரவில்லை. மாநாடு முடிந்து அனைவரையும் பத்திரமாக சென்னைக்கு அழைத்துச்சென்றோம். இதன் பிறகு மோகன்தான் கூறிய படி சம்பள தொகை தரவில்லை. பணத்தை கேட்டால் கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் ஆட்களை வைத்து தாக்க முயன்றார். தவெகவைச் சேர்ந்த சுதாகர் என்பவர், தங்களை ஆபாசமாக திட்டி விரட்டினார். இது குறித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் மோகன், சுதாகர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகாரில் தெரிவித்துள்ளனர்.

MUST READ