அதிமுகவில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் கூறுவது நல்ல விஷயம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக அமைப்புச் செயலாளர் செங்கோட்டையன், இன்று செய்தியாளர்களை சந்தித்து தனது நிலைப்பாடு மற்றும் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து மனம் திறந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்கள் , எந்த நிபந்தனையும் இல்லை எங்களை கட்சியில் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றுகேட்கிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த கருத்தை ஏற்க மறுக்கிறார். ஆகையால் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், ஒருங்கிணைப்பு பணிகளை நாங்களே மேற்கொள்வோம். பிரிந்தவர்களை இணைத்தால் மட்டுமே அதிமுக வெற்றிபெறும்.” என்று கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுகவில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் கூறுவது நல்ல விஷயம் என்று தெரிவித்துள்ளார். வ.உ.சி 154 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நெல்லை மாநகராட்சி அருகே உள்ள வ.உ.சி மணிமண்டபத்தில் அவரது உருவ சிலைக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் , மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பிரதமர் மோடி இந்தியாவிற்கு மாற்றத்தையும் ஏற்றத்தையும் ஜிஎஸ்டி கவுன்சிலில் தந்திருக்கிறார். வாடிக்கையாளர்களுக்கு லாபம் இருக்கிறது. மக்களின் வரிச் சுமை குறைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி ஒன்றிய அரசு போட்டது என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது ஜிஎஸ்டி கவுன்சில்.
எப்பொழுதுமே எதிர்த்து பேசக்கூடிய மக்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் எதிர்க்கட்சிகள். எதிர்க்கட்சிகள் வெள்ளைக்காரர்களுக்கு ஆதரவு கொடுத்த இந்தியர்கள் போல தான் எங்கள் பார்வைக்கு தெரிகிறது. வரி குறைப்பு என்பது இந்திய அரசு மட்டும் செய்வது அல்ல. அந்தந்த மாநில நிதி அமைச்சர்களும் சேர்ந்து தான் முடிவு எடுப்பார்கள்.” என்று தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்கள் அவரிடம், 2024 இல் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் பல தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம் என செங்கோட்டையன் கூறியுள்ளார் என கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இது அதிமுகவின் உள்கட்சி விவகாரம் நான் பேசுவது சரியல்ல. பாஜகவின் குரலாக செங்கோட்டையன் பேசுகிறாரா ? யாருடைய குரலிலும் அவர்கள் பேசுவதில்லை அவர்களுக்கு சொந்த குரல் இருக்கிறது. என்னை பொருத்தவரை அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் திமுகவை அகற்ற முடியும். அமைச்சர் டிஆர்பி ராஜா நான் பொய் சொல்வதாக கூறியிருக்கிறார். நான் தேதிவாரியாக அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களை வெளியிட்டு இருக்கிறேன்.” என்றார்
பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்த 5 மாதங்களில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் வெளியேறியிருக்கிறார்கள் என்ற கேள்விக்கு, “அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை. தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. கடைசியில் இருக்கும் ஒரு மாதத்தில் கூட மாற்றங்கள் நடக்கும். கட்டாயமாக மீண்டும் அவர்களை சேர்க்க முயற்சி செய்வோம். ஆட்சி மாற்றம் நடக்கும். செங்கோட்டையன் அதிமுகவில் அனைவரும் இணைய வேண்டும் என்று நினைப்பது நல்ல விஷயம். அண்ணாமலை டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்காத காரணத்தை பாஜக தலைமையில் தெரிவித்துவிட்டார்.நான் மதம் ஜாதி குறித்து பேசுவதில்லை.” என்று கூறினார்.
மேலும், உங்களின் மகனுக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. பாஜகவில் குடும்ப அரசியல் இருக்கிறதா என்கிற கேள்விக்கு, “பாஜகவில் குடும்ப அரசியல் கிடையாது. அவரவர் அவரவர் வேலையை பார்க்கின்றனர்” என்று தெரிவித்தார்.