திமுக கூட்டணியில் 8 சீட்டுகளை வாங்கியது ஏன் என்பது குறித்து தொண்டர்களிடம் திருமாவளவன் விளக்கமளித்துள்ளாா்.
திமுக கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஏற்க வேண்டிய சூழல் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விரிவான விளக்கம் அளித்துள்ளார். கூட்டணியில் 8 தொகுதிகள் பெற்றுள்ளோம்; அதில் 6 தனி தொகுதிகளும், 2 பொது தொகுதிகளும் உள்ளன என அவர் தெரிவித்தார். கட்சியின் உயர்நிலை குழு கூட்டத்தில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகள் பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.
திமுக கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி என்பதாலும், ஆட்சி அமைக்க வேண்டிய பிரதான பொறுப்பு அதற்கு இருப்பதாலும், அதிக தொகுதிகளில் போட்டியிடுவது அவசியம் என திருமாவளவன் விளக்கினார். 2021 சட்டமன்றத் தேர்தலை எடுத்துக்காட்டாகக் கொண்டு, திமுக 173 தொகுதிகளில் போட்டியிட்டு 126 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதை அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் ஆட்சி அமைக்க குறைந்தது 118 உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில், உறுதியான பெரும்பான்மைக்கு 119 இடங்கள் அவசியம் என்றும் அவர் கூறினார்.

இந்தத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெறத் தவறினால், தொங்கு சட்டசபை உருவாகும் அபாயம் இருப்பதாகவும், அத்தகைய சூழலில் எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க முயற்சி செய்யும் நிலை ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், அரசியல் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க திமுக அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார்.
ஒரு கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவது சாத்தியமில்லை; சாதாரணமாக 70% வெற்றிதான் கிடைக்கும் என்ற மதிப்பீட்டை முன்வைத்த அவர், திமுக குறைந்தது 160 முதல் 170 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் 120–125 இடங்களை வெற்றி பெற முடியும் என்றார். கூட்டணி கட்சிகளுக்கு 70-க்கும் மேற்பட்ட தொகுதிகள் ஒதுக்க வேண்டிய நிலை உள்ளதால், திமுக போட்டியிடும் தொகுதிகள் குறையக்கூடாது என்பதே முக்கிய காரணமாகும்.
கூட்டணியில் இருந்து கூடுதல் தொகுதிகளை கோருவது திமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்கக்கூடும்; அதனால் தமிழகத்தில் அரசியல் திசை மாற்றம் ஏற்படும் அபாயம் உள்ளது என திருமாவளவன் சுட்டிக்காட்டினார். திமுக ஆட்சி அமைக்காத சூழலில் அதிமுக அல்லது பாஜக ஆதரவு கொண்ட ஆட்சி உருவாகும் வாய்ப்பும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த அனைத்தையும் கருத்தில் கொண்டு, கூட்டணியை பலவீனப்படுத்தாத வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 8 தொகுதிகளை ஏற்றுக்கொண்டதாகவும், அந்த 8 தொகுதிகளிலும் 100% வெற்றியை பதிவு செய்வதே இலக்காக உள்ளதாகவும் திருமாவளவன் வலியுறுத்தினார்.
