மேகதாது அணை விவகாரம் தொடர்பான உரிமை மீறல் பிரச்சினையை அவசரமாக எழுப்ப முயன்ற அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, “என்னை இப்போதுதான் பேச வேண்டும் என கட்டாயப்படுத்த உரிமை இல்லை” என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கடுமையாக எச்சரித்து பதிலடி கொடுத்தார். இதனால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
அவையில் ஆளுநர் உரை மீதான விவாதங்களும், மேகதாது தொடர்பான தனித்தீர்மானமும் எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தன. இதன் போது, மேகதாது பிரச்சினை குறித்து உரிமை மீறல் பிரச்சனையை எழுப்ப அனுமதி வழங்க வேண்டும் என அதிமுக தரப்பு கோரிக்கை வைத்தது. ஆனால், அவை நடவடிக்கைகள் நிறைவடையும் முன் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.

இதனை ஏற்க மறுத்த எடப்பாடி பழனிசாமி, விவகாரத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி உடனடியாக பேச அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினார். மேலும், இதுகுறித்து ஏற்கனவே மனு அளித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்த சபாநாயகர், எப்போது யாருக்கு பேச வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது அவைத்தலைவரின் அதிகாரம் என்றும், உரிய நேரத்தில் பேச அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் தீவிரமடைந்தது.
அப்போது, “எங்களது உரிமை மறுக்கப்படுகிறது” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டிய நிலையில், அதிமுக உறுப்பினர்களும் முழக்கமிட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர். உடனடியாக பேச அனுமதி கோரிய இபிஎஸுக்கு பதிலளித்த சபாநாயகர், அவை நடவடிக்கைகளை கட்டாயப்படுத்த எந்த உறுப்பினருக்கும் உரிமை இல்லை என்றும், அவைத்தலைவரின் முடிவை மதிக்க வேண்டும் என்றும் கடுமையாக எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்புக்கு முன், “எங்களது கருத்தை வெளியிலேயே தெரிவிக்கிறோம்” என எடப்பாடி பழனிசாமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேகதாது அணை தொடர்பான தீர்மானத்தில் விவாதம் முடிந்த பிறகு அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அவை விதிமுறைகளுக்கு முரணானவை என குற்றம்சாட்டினார். மேலும், எந்த மாற்றமும் செய்யப்படுமானால் அது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதே நேரத்தில், காவிரி நீரை நம்பி வாழும் தமிழகத்தின் பல மாவட்ட மக்களின் நலன் முக்கியமானது என்றும், ஏற்கனவே காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், மீண்டும் புதிய நடுவர் மன்றம் தேவையா என்ற கேள்வியையும் எடப்பாடி பழனிசாமி எழுப்பினார். இந்த விவகாரம் சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், மேகதாது அணை தொடர்பான அரசியல் விவாதத்தையும் மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
சட்டசபையில் எதிரொலித்த மேயர் பிரியா – எம்எல்ஏ பல்லவி விவகாரம் …சபாநாயகர் விளக்கம்
