தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து துறை அமைச்சரான முதலமைச்சர்தான் விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால், காவல்துறைக்கான நிழல் அமைச்சர் போல ஆதவ் அர்ஜூனா கருத்து தெரிவித்து வருகிறார் என சிவசங்கர் விமர்சித்துள்ளாா்.
திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தாா். அந்த சந்திப்பில், சட்டமன்ற விவாதங்களின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து பேசிய அவர், எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு முதலமைச்சரால் நேரடியாக பதிலளிக்க முடியாத சூழலே இதற்கு காரணமாக இருக்கலாம் என்ற கருத்தை தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சி தலைவரின் உரைகளும் நேரலையில் ஒளிபரப்பப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

சட்டம் – ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளுக்கு முதலமைச்சரே விளக்கம் அளிக்க வேண்டிய நிலையில், அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக ஆதவ் அர்ஜூனா கருத்து தெரிவித்து வருவதாகவும், அவர் காவல்துறைக்கான “நிழல் அமைச்சர்” போல செயல்படுகிறார் என்ற விமர்சனத்தையும் முன்வைத்தார். மாற்றத்தை வாக்குறுதியாக முன்வைத்து ஆட்சிக்கு வந்த அரசு, அந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆறு மாத கால அவகாசம் புதிய மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்காகவே என்றும், அன்றாட சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகளில் கூட அரசு உரிய கவனம் செலுத்தவில்லை என்றும் கூறினார்.
மேலும், மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அதுகுறித்து முதலமைச்சர் நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை என்றும், சட்டப்பேரவையில் பதிலளிக்க வேண்டிய கேள்விகளுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக பதில் அளிக்கப்படுவதாகவும் அவர் விமர்சித்தார். ஆளுநர் உரை தொடர்பாகவும் கருத்து தெரிவித்த சிவசங்கர், ஆளுநர் அதனை முக்கியமான நிகழ்வாக குறிப்பிட்டதையும், சபாநாயகர் அதை இணக்கமான நிகழ்வாக விவரித்ததையும் சுட்டிக்காட்டினார். இதன் அடிப்படையில், தவெக மற்றும் பாஜக இடையே அரசியல் ரீதியான புரிதல் அல்லது இணக்கமான உறவு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் கூறியுள்ளாா்.
ரூ.1,000 கோடி குதிரை பேரம் புகார்…தவெக அரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்…
