பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசுத் துறைகளில் 1 ஏப்ரல் 2003-க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் சிபிஎஸ் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டனர். தற்போது இந்தத் திட்டத்தில் மாநிலம் முழுவதும் சுமார் 6 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். இத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என ஜாக்டோ-ஜியோ உள்ளிட்ட ஊழியர் அமைப்புகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன. அண்மையில் முதலமைச்சர் விஜயை சந்தித்த ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளும் இந்தக் கோரிக்கையை மீண்டும் முன்வைத்திருந்தனர்.

இதற்கிடையில், சிபிஎஸ் ஓய்வூதியத் திட்டத்திற்கான முழுமையான விதிமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படாததால், கடந்த ஜனவரி 1 முதல் ஜூன் மாதம் வரை ஓய்வு பெற்ற 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் கிடைக்காமல் இருந்தன. இந்த நிலையை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஜனவரி 1, 2026 முதல் முன்தேதியிட்டு இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
ஓய்வூதிய விதிமுறைகள் முழுமையாக அமலுக்கு வரும் வரை, ஓய்வு பெறும் போது பெற்ற கடைசி அடிப்படைச் சம்பளத்தின் 30 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம் ஆகியவற்றில் எது அதிகமோ அந்தத் தொகை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதனுடன் 60 சதவீத அகவிலைப்படியும் சேர்த்து மாதந்தோறும் இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக ஓய்வூதியப் பலன்கள் இன்றி தவித்து வந்த ஆயிரக்கணக்கான ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு ஊழியர் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்…
