நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் மூன்று கட்சிகளின் வாக்கு வங்கியை பாதிக்கும் என்று சிவகங்கை காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், “விஜய்யின் கட்சிக்கு “மறைமுக ஆற்றல்” இருக்கிறது. ஆனால், அது சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தன்னை மாற்றிக் கொள்ளுமா என்பதில் சந்தேகம் இருந்தது.
ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடையே, குறிப்பாக இளைய, நகர்ப்புற, கிராமப்புற ஆண்கள் மத்தியில் நிச்சயமாக செல்வாக்கு இருக்கிறது. அது ஒருங்கிணைக்கப்பட்ட வாக்கு வங்கியாக மாறுமா? தேர்தலில் வெற்றி பெறுமா? பலமுனைப் போராட்டமாக மாறுமா? என்பது எனக்குத் தெரியாது. விஜய் கட்சி ஆரம்பித்துள்ளது நிச்சயமாக மூன்று கட்சிகளை நேரடியாக பாதிக்கும். ஆனால், திமுகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. திமுக வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. திமுக என்பது கேடர் அடிப்படையிலான கட்சி. இது பெரும் வளங்களைக் கொண்ட மிகவும் வலுவான அமைப்பாகும். கட்சிக்குள் அடுத்த தலைமையும் அடையாளம் காணப்பட்டுள்ளது,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.
தவெக-வால் பாதிக்கப்படும் மூவரில் ஒருவர் நாம் தமிழர் கட்சி மற்றும் அதன் தலைவர் சீமான், ஏனெனில் வாக்கு வங்கியின் கணிசமான பகுதி விஜய்யின் கட்சிக்கு நகரும். விஜயகாந்தின் கட்சி கணிசமாக சரிந்துவிட்டது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் பாஜகவின் முயற்சிகள், அண்ணாமலையின் செயல்பாடுகளால் வாக்காளர்களின் ஆதரவை இழக்க நேரிடும். 2024-ஐ விட 2026-ல் பாஜகவுக்கு மிகக் குறைவான வாக்குகள் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். நம்பகமான கூட்டணியை உருவாக்குவது பாஜகவுக்கு கடினமாக இருக்கும்.
கூட்டணிக்குள் அதிகாரப் பகிர்வுக்கு விஜய்யின் ஆதரவு நல்ல முயற்சி. ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அதிகாரப்பகிர்வில் அங்கம் வகிக்க விரும்புகிறது. தமிழகத்தில் தேர்தல் கூட்டணியில் அங்கம் வகிப்பவர், ஆட்சியில் அங்கம் வகிப்பவர் என்று சொல்ல முடியாத ஒரு முன்னுதாரண மாற்றத்தை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.
சந்திரபாபு நாயுடு கூட்டணி அமைத்து, பெரும்பான்மை பெற்று, கூட்டணி கட்சிகளை ஆட்சியில் சேர்த்துக் கொண்ட உதாரணம் இருக்கிறது. இது ஒரு நேர்மறையான அறிகுறி. இது என் பார்வை மட்டுமல்ல; வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இப்போது விஜய்யின் கட்சியும் இந்த அணுகுமுறையை ஆதரிக்கின்றன. அதனை வரவேற்கிறேன் ”என்று அவர் கூறினார்.